

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரண்டரை டன் வெல்லம் வீணானது என ஆட்சியர் ஆய்வில் தெரியவந்தது.
திருவண்ணாமலை மாவட்டத் தில் 7.76 லட்சம் குடும்ப அட்டை களுக்கு 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி கடந்த 4-ம் தேதி முதல் நடைபெறுகிறது. திருவண்ணாமலை, கீழ் பென்னாத் தூர், தண்டராம்பட்டு வட்டங்களில் உள்ள நியாய விலை கடைகளுக்கு, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பொங்கல் பரிசு தொகுப் புக்காக வைக்கப்பட்டிருந்த ‘வெல்லம்’ கெட்டுபோனதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பொங்கல் பரிசு தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருந்த சுமார் இரண்டரை டன் வெல்லம் கெட்டு போய் இருப்பதை கண்டு ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து புதிதாக வெல்லம் கொள்முதல் செய்து, தடையின்றி மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகம் செய்ய உத்தரவிட்டார். அதே போல் பொருட்களின் எடை, சரியாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களின் தன்மை குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் குணசேரன், கோட்டாட்சியர் வெற்றிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.