சித்த மருத்துவத்தால் கரோனாவை போல ஒமைக்ரானையும் வெல்லலாம்: ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையின் உதவி மருத்துவ அலுவலர் நம்பிக்கை

சித்த மருத்துவத்தால் கரோனாவை போல ஒமைக்ரானையும் வெல்லலாம்: ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையின் உதவி மருத்துவ அலுவலர் நம்பிக்கை
Updated on
2 min read

உலக மக்களை மீண்டும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் தொற்றை சித்த மருத்துவம் மூலம் விரட்ட பல்வேறு வழி முறைகள் உள்ளதாக ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப்பிரிவின் உதவி சித்த மருத்துவ அலுவலர் வி.விக்ரம் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் மற்றும் கரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதால் 3-வது அலை உருவாகிவிட்டதாக மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்படியிருந்தாலும் கரோனாவின் 2 அலைகளை விரட்டியதைப் போலவே, ஒமைக்ரான் போன்ற கொடிய வைரஸையும் சித்த மருத்துவம்மூலம் விரட்டியடிக்கலாம். அதற்காக, பல்வேறு வழிமுறைகள் இருப்பதாக திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவின் உதவி மருத்துவ அலுவலர் வி.விக்ரம்குமார் தெரி வித்துள்ளார்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் அவர் கூறியதாவது, ‘‘உலக அளவில் ஒமைக்ரான் பெரும் பேசும் பொருளாக தற் போது மாறிவிட்டது.

ஒமைக்ரான் தொற்றை கண்டு பொதுமக்கள் அச்சப்பட தேவை யில்லை. 2 அலைகளை சமாளித்த அனுபவம் நம்மிடம் உள்ளது. எனவே, 3-வது அலையை நாம் தைரியமாக எதிர்கொள்ள முடியும்.சித்த மருத்துவத்தில் அதற்கு பல வழிகள் உள்ளன.

கிருமிநாசினிகளோடு மஞ்சள் கரைத்த நீர், திருநீற்றுப் பச்சிலை, நொச்சி, கற்பூரவள்ளி ஊறிய தண்ணீரை வீடு மற்றும் அலுவலகங்களில் தெளிக்க வேண்டும். தினசரி உணவில் மிளகு, மஞ்சள், கிராம்பு போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருட்களை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இலவங்கப்பட்டை, அன்னாச்சிப்பூ, சுக்கு, கிராம்பு போன்ற நறுமணம் சேர்க்கும் மருத்துவப் பொருட்களை சிறிதளவு சேர்த்து தினசரி குடிநீராக காய்ச்சி பருகலாம். தேநீர், காபி பருகுவதற்கு பதிலாக, இஞ்சி டீ, சுக்கு கசாயம், மிளகு ரசம், கொள்ளு ரசம், தூதுவளை துவையல், புதினா சட்னி, நெய்யில் வதக்கிய சிறிய வெங்காயம், மிளகு தூவிய பழவகைகள், குறிப்பாக நெல்லிக்காயை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.

மருத்துவர் வி.விக்ரம்குமார்.
மருத்துவர் வி.விக்ரம்குமார்.

மேலும், கீரை வகைகள், காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் ஆடாதோடை மணப்பாகு, நிலவேம்பு குடிநீர், கபசுரக்குடிநீர், தாளிசாதி சூரணம், அதிமதுரசூரணம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். மேலும், அமுக்கரா சூரணம், பிராமனந்த பைரவம், வசந்தகுசுமாகரம் போன்ற சித்த மருந்துகளை தற்போதைய சூழ்நிலைக்கு பயன் படுத்தலாம். சுவாசப்பாதையை முறைப்படுத்த பாரம்பரிய முறையில் ஆவி பிடிக்கலாம்.

கரோனா மற்றும் ஒமைக்ரான் போன்ற தொற்று நோய்கள் வராமல் தடுத்து நம்மை நாம் பாதுகாக்க நம்முடைய பாரம்பரிய உணவு மற்றும் வாழ்க்கை முறையை நிச்சயம் நாம் பின்பற்ற வேண்டும். கரோனாவின் முதல் 2 அலைகளை நாம் கடந்துள்ளோம். நம்மிடம் பலமான மருத்துவக் கட்டமைப்பு உள்ளது. சித்தமருத்துவமும், நவீன மருத்துவமும், கரோனா தடுப்பூசியும் இணைந்து எந்த வைரஸ் தொற்று வந்தாலும் அதை நிச்சயம் நம்மால் எதிர் கொள்ள முடியும். மக்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க சித்த மருத்துவம் எப்போதும்கைகொடுக்கும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in