Published : 08 Jan 2022 06:43 PM
Last Updated : 08 Jan 2022 06:43 PM

ஜல்லிக்கட்டுப் போட்டியில் தமிழக அரசு மவுனம் கலையுமா? போட்டிகளுக்குத் தயாராகும் வாடிவாசல், காளைகள், மாடுபிடி வீரர்கள்  

மதுரை: ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவது பற்றி தமிழக அரசு இன்னும் முடிவு எடுக்காமல் தாமதம் செய்து வருவதால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்து வரும் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி குழுவினர் நெருக்கடியில் உள்ளனர். ஆனால், மற்றொரு புறம் போட்டியை எதிர்பார்த்து வாடிவாசலைத் தயார் செய்து ஜல்லிக்கட்டுக் காளைகளும், மாடுபிடி வீரர்களும் முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

பொங்கல் பண்டிகையும், ஜல்லிக்கட்டுப் போட்டியையும் தென் தமிழகத்தில் பிரித்துப் பார்க்க முடியாது. சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கும். இந்த கிராமங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், அடக்கும் மாடுபிடி வீரர்கள், திமிறி ஓடும் காளை, வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளைளுக்குப் பல கோடி ரூபாய்க்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். அதனால், தீபாவளி பண்டிகைக்குப் பிறகு பொங்கல் பண்டிகையிலும் தென் மாவட்டங்களில் அனைத்து வணிக நிறுவனங்களிலும் வர்த்தகம் களைகட்டும். ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை ஏற்பட்டபோது அதை எதிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது.

கோப்புப் படம்.

அதனால், அப்போதைய அதிமுக அரசு அவசரம் அவசரமாக சட்டப்பேரவையில் தனிச் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டுப் போட்டி தடையை உச்ச நீதிமன்றம் மூலம் நீக்கியது. மக்களின் உணர்வோடும், பண்பாட்டோடும் கலந்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தற்போது கரோனா தொற்று மூலம் மீண்டும் சோதனை ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சிறப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்ட நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டியை மட்டும் நடத்துவது பற்றியும், அதற்கான வழிகாட்டுதல்களையும் அறிவிக்கவில்லை. அதனால், மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கான உடல் தகுதிச் சான்று வழங்கும் பணி மட்டுமே தற்போது வரை நடக்கிறது.

அதற்குப் பிறகு ஜல்லிக்கட்டுக் காளைகளுக்குக் குறிப்பிட்ட போட்டிகளில் பங்கேற்க டோக்கன் வழங்குவது, மீண்டும் போட்டி நடக்கும் அன்று வாடிவாசலுக்கு முன் மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்து மாடுபிடி வீரர்கள் பிடிக்க அவிழ்த்து விடப்படுகிறது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வரும் 14-ம் தேதி நடக்கிறது.

அதற்கு அடுத்து மறுநாள் 15-ம் தேதி பாலமேடு, 16-ம் தேதி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கின்றன. அதனைத் தொடர்ந்து 3 மாதங்கள் வரை தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். தற்போது கரோனா வேகமாகப் பரவினாலும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கட்டுப்பாடுகளுடன் நடத்தும் முடிவில் தமிழக அரசு உறுதியாக இருந்தாலும் இன்னும் அதற்கான முடிவை அறிவிக்காமல் மவுனமாகவே இருக்கிறது. அதனால், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள், காளைகள் முன்பதிவு, போட்டி விதிமுறைகளை வரையறை செய்வது உள்ளிட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் இன்னும் தொடங்கவில்லை.

ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் மட்டுமே போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்கின்றனர். தமிழக அரசின் தொடர் மவுனம், ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்களைக் குழப்பமடைய வைத்துள்ளது. ஆனாலும், மற்றொரு புறம் கிராமங்களில் தற்காலிக வாடிவாசல் அமைத்து, அதில் ஜல்லிக்கட்டுக் காளைகளும், மாடுபிடி வீரர்களும் பயிற்சி எடுத்துப் போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அலங்கா நல்லூரில் நேற்று முதல் வாடிவாசலுக்கு பெயிண்டிங் அடித்து தயார் செய்யும் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதுகுறித்து மாவட்ட உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டம் நேற்று ரத்து செய்யப்பட்டதோடு சரி, இதுவரை இந்தப் போட்டிக்கான அடுத்தகட்ட நடவடிக்கை, வழிகாட்டுதல்கள் எதுவும் அரசுத் தரப்பில் இருந்து வரவில்லை. வரும் திங்கட்கிழமை தமிழக அரசுத் தரப்பில் இருந்து ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x