பண்டிகை நாட்களில் அரசுத் தேர்வுகளை நடத்தக் கூடாது: மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் | கோப்புப் படம்.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: பண்டிகை நாட்களில் அரசுத் தேர்வுகளை நடத்தக் கூடாது, தள்ளிவைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் முக்கியமான கொண்டாட்டமாகத் திகழும் பொங்கல் திருநாள்களில் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மத்திய அரசுப் பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளில், சொந்த ஊர்களில் கொண்டாட்ட மனநிலையில் இருக்கும்போது இப்படி தேர்வுகள் நடைபெறுவது சரியா என்று தலைவர்கள் பலரும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''உழவுத் தொழிலைப் போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாளாகவும், உழவுத் தொழிலுக்கு உயிரூட்டும் இயற்கையையும், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும் போற்றுகின்ற நன்னாளாகவும், நன்றி தெரிவிக்கும் வகையிலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் தனித்த அடையாளமான இந்தப் பண்டிகை நாட்களில் அரசுத் தேர்வுகள் நடத்துப்படுவது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.

யூபிஎஸ்சி மெயின் தேர்வு திட்டமிட்டபடி ஜனவரி 7, 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழர்களின் பண்பாட்டை பிரதிபலிக்கும் பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படும். தமிழ் மக்களின் வாழ்வில் முக்கியமான பண்டிகை என்பதால், பணி நிமித்தமாக வெளி ஊர்களில் வசிப்பவர்கள் எல்லோரும் சொந்த ஊர்களுக்குச் சென்று தங்கள் சொந்தங்களுடன் பெருமகிழ்வுடன் இந்த விழாவைக் கொண்டாடுவார்கள். உறவுகளும் உணர்வுகளும் வலுப்படும் இந்த நாட்களில் தேர்வு நடத்தப்படுவது தமிழர்களின் பண்பாட்டில் கைவைக்கும் செயலாகும்.

அத்துடன், ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு நாட்களிலும் தேர்வு இருக்கிறது. எனவே தேர்வர்களின் நலன் பாதுகாப்பினை மத்திய அரசு கருத்தில் கொண்டு தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும்.

பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 15,16 தேதிகளில் நடத்தப்பட இருந்த அஞ்சல் துறையின் ஆய்வாளர் பதவி உயர்வுக்கான துறைத் தேர்வுகள் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்ததை அடுத்து தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. தமிழைக் கொண்டாடுவதாக நாடகம் இயற்றும் மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் பொருட்படுத்துவதே கிடையாது.

மத்திய, மாநில அரசுகள் போட்டித் தேர்வுகள் தேதி நிர்ணயம் செய்யும்போது, விழாக் காலத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசு தேர்வர்களின் பாதுகாப்பைக் கணக்கில் கொண்டு யூபிஎஸ்சி மெயின் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும்''.

இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in