

சென்னை: நீட் தேர்வு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில்சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், தொடர்ந்து நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
திமுக வாக்குறுதி
இந்நிலையில், கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
அதன்படி, திமுக ஆட்சி அமைந்த நிலையில், கடந்த ஆண்டு செப்.19-ம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் ஒருமனதாக சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் அலுவலகத்தில் இருந்து அந்த மசோதாஇதுவரை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவில்லை.
எம்.பி.க்கள் மனு
இதற்கிடையே, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவினர் குடியரசுத் தலைவரிடம் மசோதா தொடர்பாக மனு அளித்தனர். அந்த மனு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், உள்துறை அமைச்சரைஎம்.பி.க்கள் குழு சந்திக்க முயற்சித்தது. ஆனால், அனுமதி கிடைக்கவில்லை.
இந்த சூழலில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த 6-ம் தேதி110-வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, நாம் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவதற்கு சட்டப்பேரவையில் உள்ளஅனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை ஜன.8-ம் தேதி நடத்தமுடிவு எடுத்துள்ளோம். அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.
அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகை 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.