

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 40,288 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அகிலஇந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதஇடங்கள் போக 4,277 எம்பிபிஎஸ், 175 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதுதவிர தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு, அரசு ஒதுக்கீட்டுக்கும் இடங்கள் உள்ளன.
இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைகலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது www.tnhealth.tn.gov.in மற்றும் tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் கடந்த டிச.19-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், ஆன்லைனில் விண்ணப்பிப்பது நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 25,511பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 பேர் என 40,288பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுபற்றி மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் வசந்தாமணி மேலும் கூறியபோது, ‘‘ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துநேரிலோ, தபால் மூலமாகவோ ‘செயலாளர், தேர்வுக் குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162,ஈவெரா நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010’ என்ற முகவரியில் ஜன.10-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
2019-20ல் 35,016 பேர், 2020-21ல்39,223 பேர் விண்ணப்பித்த நிலையில், 2021-22ல் 40,288 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவற்றை பரிசீலித்து 2 வாரத்தில் தரவரிசைபட்டியல் வெளியிடப்படும். அகிலஇந்திய இடஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்ததும், இங்கு கலந்தாய்வு தொடங்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.