அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பணிகள் தீவிரம்: காளைகளுக்கான உடல்தகுதி பரிசோதனை தொடங்கியது

ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக காளைகளுக்கு உடல்திறன் பரிசோதனை அலங்காநல்லூரில் நேற்று தொடங்கியது
ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக காளைகளுக்கு உடல்திறன் பரிசோதனை அலங்காநல்லூரில் நேற்று தொடங்கியது
Updated on
1 min read

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான உடற்தகுதி பரிசோதனை அலங்காநல்லூர் பகுதியில் தொடங்கியுள்ளது. இதில் தேர்ச்சி பெறும் காளைகள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும் என்பதால் உரிமையாளர்கள் காளைகளை பரிசோதனைக்கு அழைத்து வருவதில் ஆர்வம் காட்டினர்.

பொங்கல் பண்டிகையையொட்டி ஜன. 14, 15, 16 ஆகிய தேதிகளில் முறையே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் காளைகளுக்கு உடல் தகுதி திறன் பரிசோதனை அவசியம். இதற்கான பரிசோதனை அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஏற்கெனவே நடந்து வருகிறது. அலங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் உடல்தகுதி பரிசோதனை நேற்று தொடங்கியது. கால்நடை உதவி மருத்துவர் நவநீதகண்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதனை செய்தனர்.

நாட்டு காளை மாடுகள் மட்டுமே பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டன. காளைகளின் திமிலின் அளவு, வயது, பற்கள், இரு கொம்புகளுக்கும் இடையே குறிப்பிட்ட இடைவெளி என பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டு மாடுகள் அல்லாதவை தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மாட்டின் முதுகில் தழும்புகள் ஏதேனும் இருக்கிறதா எனவும் பரிசோதனை செய்தனர்.

காளை வளர்ப்பவர்கள் காளைகளுடன் சேர்ந்து நின்றபடி எடுக்கப்பட்ட புகைப்படம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆதாரங்களை வழங்கி தகுதிச்சான்றிதழ்களை பெற்றனர். கரோனாபரவலை தவிர்க்க காளை உரிமையாளர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து தகுதிச்சான்றிதழை வழங்கினர். இப்பரிசோதனை சில தினங்களுக்கு நீடிக்கும் என கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.

உடல்தகுதி தேர்வில் தகுதிபெறும் காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க முடியும் என்பதால், இப்பரிசோதனைக்கு ஆர்வத்துடன் காளைகளை உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். காளைகளை ஜல்லிக்கட்டுக்கு பதிவு செய்யும் பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in