விசாரணைக்கு ஆஜராகும்படி கடவுளுக்கு சம்மன் அனுப்ப முடியாது: கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

சிவியார் பாளையம் பரமசிவன் சுவாமி
சிவியார் பாளையம் பரமசிவன் சுவாமி
Updated on
2 min read

சென்னை: ‘விசாரணைக்கு ஆஜராகும்படியோ அல்லது ஆய்வு செய்ய வேண்டும் என்றோ கடவுளுக்கு சம்மன் அனுப்ப முடியாது’ என சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய சுவாமியின் மூலவர் சிலையை நேரில் கொண்டு வந்து ஆஜர்படுத்த உத்தரவிட்ட கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகாவில் உள்ள சிவியார் பாளையத்தில் பழமையான பரமசிவன் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த மூலவர் சிலை கடத்தப்பட்டு, பின்னர் அச்சிலையை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் மீட்டு, கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதன் பிறகு, அந்தமூலவர் சிலை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆகம விதிகளின்படி மூலவர் விக்கிரகம் அந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டு உள்ளது. தற்போது சுவாமியின் திருவுருவமாக உள்ள அந்த விக்கிரகத்துக்கு தினமும் வழிபாடுகள் நடத்தப்பட்டு, கிராம மக்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விக்கிரகம் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புசிறப்பு நீதிமன்ற நீதிபதி, இந்த சிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காக, தற்போது கோயிலில் மூலவராக காட்சி தரும் விக்கிரகத்தை ஜன.6 அன்று (நேற்று முன்தினம்) நேரில் கொண்டு வந்து ஆஜர்படுத்த வேண்டும், என உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி அந்த சிலைக்கு பாலாலயம் செய்து மூலவர் விக்கிரகத்தை சந்நிதியில் இருந்து அகற்றி கும்பகோணத்துக்கு கொண்டுசெல்ல கோயில் செயல் அலுவலர் எடுத்த நடவடிக்கைகளுக்கு கிராம மக்களும், பக்தர்களும் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந்நிலையில் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், “மூலவர் விக்கிரகம் ஏற்கெனவே கடத்தப்பட்டு பின்னர் மீட்கப்பட்டு, தற்போதுகோயிலில் சுவாமியின் வடிவமாக காட்சிதந்து கொண்டிருக்கிறது. இறை நம்பிக்கைகொண்டவர்கள் யாரும் சிலைகளை வெறும்சிலைகளாக பார்ப்பது இல்லை. கடவுளாகத்தான் பார்த்து வருகின்றனர்.

இந்த சூழலில் மூலவர் விக்கிரகத்தை ஆய்வுசெய்ய வேண்டும் என்பதற்காக கோயிலில் இருந்து தோண்டி எடுத்துக் கொண்டு செல்லஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவேஇதுதொடர்பாக கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.சுரேஷ்குமார் முன்பாக நடந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் சி.கே.சந்திரசேகரும்,அறநிலையத் துறை சார்பில் சிறப்புஅரசு வழக்கறிஞர் டி.சந்திரசேகரனும் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘குற்ற வழக்கில் சான்றுப் பொருளாக இருந்தாலும் கூட சிலைகளை கடவுளின் ரூபமாக நினைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். அப்படியிருக்கும்போது வழக்குவிசாரணைக்கு ஆஜராகும்படியோ அல்லதுஆய்வு செய்ய வேண்டும் என்றோ கூறி கடவுளுக்கு சம்மன் அனுப்ப முடியாது. அவ்வாறு கீழமை நீதிமன்றம் மூலவர் விக்கிரகத்தை நேரில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டு இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

பொதுவாக உற்சவர் சிலைகளை ஆகமவிதிகளைப் பின்பற்றி கோயில் பிரகாரத்திலும், கோயிலுக்கு வெளியேயும் ஊர்வலமாக எடுத்துச் செல்வது உண்டு. ஆனால் கடவுளாக பார்க்கப்படும் மூலவர் விக்கிரகம் ஒருமுறை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டால், நீதிமன்றமே உத்தரவிட்டாலும் கூட அதை கோயிலில் இருந்து தோண்டி எடுத்து அகற்றுவது என்பது இயலாத காரியம். இறை நம்பிக்கை கொண்டயாரும் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.

மேலும், அது ஆகம விதிகளுக்கு மட்டுமின்றி, பக்தர்களின் மதரீதியிலான உணர்வுகளையும் காயப்படுத்திவிடும். ஒருவேளை அந்த விக்கிரகத்தை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் விரும்பினால் வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்து கோயில் அலுவலர்கள், பக்தர்கள் முன்னிலையில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவி்ட்டு கீழமைநீதிமன்றம் விசாரணையை தொடரலாம். எனவே அந்த கோயில் மூலவரைக் கொண்டுவந்து நேரில் ஆஜர்படுத்த வேண்டிய அவசியமில்லை. பக்தர்களின் இறை நம்பிக்கைக்கும், மத உணர்வுகளுக்கும் கீழமை நீதிமன்றம் மதிப்பளிக்க வேண்டும். எனவே இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், எனஉத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துஉள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in