

சென்னை: சென்னையில் பாஜகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்துக்கு பிரதமர் மோடி சென்றபோது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டால் பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். இந்நிலையில் பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் மாநில அரசை கண்டித்து தமிழகபாஜக சார்பில் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, “காங்கிரஸ் கட்சியின் தலைமை நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க எது வேண்டும் என்றாலும் செய்யும்” என்றார்.
இதை தொடர்ந்து, பாஜகவினர் ஊர்வலமாக காந்தி சிலை வரை செல்ல முற்பட்டனர். ஆனால், போலீஸார் அனுமதி தர மறுத்து அனைவரையும் தடுத்து நிறுத்தனர். அப்போது, போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, துணை தலைவர் வி.பி.துரைசாமி, தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் அமர்ந்து திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாஜக எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி ஆகியோரும் வந்தனர். பின்னர், பாஜகவினரை கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஒரு சில மணி நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.