

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு நேற்று முதல் அனுமதி மறுக்கப்பட்டதால் கோயில்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதையடுத்து, மருதமலை முருகன் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில், பெரியகடைவீதி கோனியம்மன் கோயில், அவிநாசி சாலை தண்டு மாரியம்மன் கோயில், கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில், புலியகுளம் விநாயகர் கோயில் என மாவட்டம் முழுவதும் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களிலும் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதுதொடர்பாக, வழிபாட்டுத் தலங்களின் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் நுழைவு வாயில் முன்பு நின்று கோபுர தரிசனம் செய்து சென்றனர். ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமையில் பக்தர்கள் அதிகம் வருவது வழக்கம். நேற்று கோயில் கோபுர வாயில்கள் மூடப்பட்டதால், பக்தர்கள் கோபுரவாசலின் முன்பு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. அதேநேரம், கோயில்களில் வழக்கமாக நடைபெறும் பூஜைகளை அர்ச்சகர்கள் மேற்கொண்டனர்.
கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகளிலும் நேற்று மக்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டது. வழிபாட்டுத் தலங்களில் அரசின் கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என மாவட்ட நிர்வாகத்தினர், மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.