Published : 08 Jan 2022 10:17 AM
Last Updated : 08 Jan 2022 10:17 AM

காகிதப் பயன்பாடு இல்லாத நிர்வாகத்தில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த கோவை மாநகர காவல்துறைக்கு பாராட்டு சான்றிதழ்

காகிதப் பயன்பாடு இல்லாத நிர்வாகத்துக்காக, கோவை மாநகர காவல்துறைக்கு, சென்னை டிஜிபி அலுவலகத்திலிருந்து பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு, அனைத்து அரசுத் துறைகளிலும், காகிதப் பயன்பாடு இல்லாத நிர்வாகத்துக்காக, கணினி மூலம் கடிதங்கள், ஆவணங்களை அனுப்பும் ‘இ-கவர்னென்ஸ்’ திட்டத்தை அறிமுப்படுத்தியது. காவல் துறையில் கடந்த 2020-ம் ஆண்டு, காகிதப் பயன்பாடு இல்லாத திட்டம் கொண்டு வரப்பட்டாலும், கடந்த 2 மாதங்களாக தான், இத்திட்டம் நூறு சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. காவல்துறையினரின் அலுவலக பயன்பாட்டுக்கான கோப்புகள் அனைத்தும் தற்போது கணினி வழியாக அனுப்பப்படுகிறது. இதற்காக இ-பைலிங் என்ற தனி மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மாநகர காவல் அதிகாரிகள் கூறும்போது, ‘‘காவல்துறையில் நிர்வாக ரீதியிலான கடிதங்கள் தற்போது இ-பைலிங் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. பதவி உயர்வு, பணியிட மாற்றம், விடுமுறை, மருத்துவ விடுமுறை, துப்பாக்கி மற்றும் பட்டாசு கடை வைப்பது உள்ளிட்ட உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் நடைமுறை அனைத்தும் முன்பு கடிதங்கள் அடங்கிய கோப்புகளில் பராமரிக்கப்பட்டன. தற்போது இவை அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக காவல் ஆணையர், துணை ஆணையர்கள் உள்ளிட்டோருக்கு ரகசிய எண் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சுப் பணியாளர்கள், கீழ்நிலை காவலர்கள் அனுப்பும் ஆவணங்களை, இறுதியாக ஆணையர் தனது கணினியில் பார்த்து ஒப்புதல் அளிக்க முடியும். தேவை என்றால் ஆணையர், தனது கணினியில் அந்த ஆவணம் அல்லது கடிதத்தில் திருத்தம் மேற்கொள்ள முடியும். இதன்மூலம் தேவையின்றி கோப்புகள் தேக்கமடைவது தவிர்க்கப்படுவதுடன், காகிதங்களின் பயன்பாடும் குறைக்கப்பட்டு, நேர விரயமும் தவிர்க்கப்படுகிறது,’’ என்றனர்.

கடந்த நவம்பரில் 9,975 ஆவணங்கள் (கடிதங்கள்), கடந்த டிசம்பரில் 11,316 ஆவணங்கள் ஆன்லைன் முறையில் அனுப்பியுள்ளனர்.

இதன் அடிப்படையில், காகிதங்கள் பயன்பாடு இல்லாத நிர்வாக பயன்பாட்டில் தமிழக அளவில், கோவை மாநகர காவல்துறை முதலிடம் பிடித்துள்ளது. இதற்காக கோவை மாநகர காவல் நிர்வாகத்தை பாராட்டி, சென்னை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த பாராட்டு சான்றிதழ், நேற்று மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமாரிடம் வழங்கப்பட்டது. மாநகர காவல்துறையின் தலைமையிட துணை ஆணையர் செல்வராஜ் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x