Published : 08 Jan 2022 10:23 AM
Last Updated : 08 Jan 2022 10:23 AM

நீலகிரி மாவட்டத்தில் காட்டெருமைகளால் நிகழும் மனித-விலங்கு மோதலை தவிர்க்க அறிவியல் ரீதியாக முயற்சி: சர்வதேச வன விலங்குகள் நிதியத்துடன் வனத்துறை கைகோர்ப்பு

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி தாலுகாக்களில் காட்டெருமைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. தேயிலை தோட்டங்களுக்கு நடுவே வளர்ந்துள்ள களைச் செடிகளையும், புற்களையும் உட்கொள்ள ஆரம்பித்தால், சுமார் 2 மணி நேரம் முதல் 5 மணிநேரம் வரை அங்கேயே சுற்றி வருகின்றன.

இதனால், அந்த தேயிலை தோட்டங்களுக்கு விவசாயி களோ அல்லது கூலித் தொழி லாளிகளோ பணிக்கு செல்ல முடிவதில்லை. சில நேரங்களில் பசுந்தேயிலையை பறிக்கக்கூட முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், தேயிலை தோட்டங்களில் பணிபுரியும்போது விரட்டுவதால், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், விவசாய நிலங்களுக்குள் நுழையும் காட்டெருமைகளை விவசாயிகள் விரட்டுவதால்,கன்றுகள் தங்கள் தாயுடன்தோட்டங்களிலிருந்து ஓடுகின்றன.தோட்டத்தில் வேலி அமைக்கப்பட்டிருப்பதால், அதை தாண்டி செல்ல வேண்டிய சூழல் ஏற்படுவதால், சில நேரம் வேலியில் சிக்கி காயமடைகின்றன. சில நேரங்களில் காட்டெருமைகள் தாக்கி உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் மாவட்டத்தில் காட்டெருமைகள் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே, தேயிலை தோட்டங்களுக்குள் காட்டெருமைகள் வராமல் தடுக்க வனத்துறை நடவடிக்கைஎடுக்க வேண்டுமென விவசாயிகள்வலியுறுத்திவருகின்றனர். காட்டெருமைகளுக்கு மிக அருகில் மனிதர்கள் செல்வதால்தான், அவை தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக சர்வதேச வன விலங்குகள் நிதியத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.பூமிநாதன் கூறும்போது, "வனத்துறையுடன் இணைந்து எங்கள் அமைப்பு, மக்கள் மற்றும் காட்டெருமை மோதல் குறித்து முழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

காட்டெருமைகளின் எண் ணிக்கை, அதிகம் வசிக்கும் இடங்கள், மோதல் ஏற்படும் இடங்கள், மனித-விலங்குகள் மோதலை தவிர்ப்பது குறித்து அறிய, மோதல்நிகழ்ந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவி, காட்டெருமைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கிறோம்" என்றார்.

இடமாற்ற நடவடிக்கை

வனத்துறையினர் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால், கூட்டத்தில் இருந்து வெளியேறும் விலங்குகள்குடியிருப்புகள் மற்றும்விளை நிலங்களில் புகுந்துவிடுகின்றன. இதனால், மனித-விலங்கு மோதல்களை தவிர்க்கஅறிவியல்ரீதியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக சர்வதேச வன விலங்குகள் நிதியத்துடன் இணைந்து, வனத்துறை ஆய்வு செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, காட்டெருமைகளின் வழித்தடத்தில் வசிக்கும் மக்களை வெளியேற்றவும், பிரச்சினைக்குரிய விலங்குகளை இடமாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். விலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள்நுழைகின்றன என்பதை கருத்தில்கொண்டு, வனங்களிலுள்ள களைச்செடிகள் மற்றும் அந்நிய தாவரங்களான கற்பூரம், சீகை மரங்களை அகற்றி, புல்வெளிகளை அதிகரிக்கும் பணியில்ஈடுபட்டு வருகிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x