

தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திருநெல்வேலியில் கோயில் கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
வெள்ளிக்கிழமைகளில் மசூதிகளில் தொழுகை நடைபெறுவது வழக்கம். அரசின் கட்டுப்பாடு காரணமாக மசூதிகள் மூடப்பட்டதை அடுத்து முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனர். இதுபோல் தேவாலயங்கள் மூடப்பட்டதால் வீடுகளிலேயே கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில், இலஞ்சி குமாரர் கோயில் உட்பட அனைத்து கோயில்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் வளாகத்துக்குள் நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் தெற்கு மற்றும் வடக்கு பகுதி டோல்கேட் மற்றும் அனுக்ரக மண்டபம் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸார் மற்றும் கோயில் தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.ஆகமவிதிப்படி கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, அனைத்து கால பூஜைகளும் வழக்கம்போல் நடைபெற்றன. பக்தர்கள் கோயில் நுழைவாயில் முன்பு சூடம் ஏற்றி, கோபுர தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர். இதேபோல், நவத்திருப்பதி கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் நேற்று மூடப்பட்டிருந்தது. அங்கும் பக்தர்கள் தேவாலயத்துக்கு வெளியே நின்றபடி வழிபட்டு சென்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் நேற்று எந்த பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த தடை நாளை (ஜன.09) ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும். காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.