Published : 07 Jan 2022 07:29 PM
Last Updated : 07 Jan 2022 07:29 PM

வழக்குகளுக்கு பயந்து நடுங்குவோருக்கெல்லாம் பாதுகாப்புத் தர இயலாது: அதிமுகவுக்கு ஸ்டாலின் பதில் 

சென்னை: வழக்குகளுக்கு பயந்து நடுங்குவோருக்கெல்லாம் எங்களால் பாதுகாப்புத் தர இயலாது என்று அதிமுகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து பேசியது:

"எங்களது கட்சிக்காரர்களை விசாரணை என்ற பெயரால் அழைத்துச் செல்கிறார்கள்' என்று பொத்தாம் பொதுவாக எதிர்க்கட்சித் தலைவர் பேசியிருக்கிறார். அது எந்த வழக்கு என்பது தெரியவில்லை. அந்த வழக்கு பாயுமோ, இந்த வழக்கு பாயுமோ என்று பயந்து நடுங்குறவங்களுக்கெல்லாம் எங்களால் பாதுகாப்புத் தர இயலாது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. தி.மு.க.-வைச் சேர்ந்தவர்களே யாராவது தவறு செய்தால், ஒரு சின்ன குற்றத்தில் ஈடுபட்டாலும், நிச்சயமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன், இந்த ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

"52 மணி நேர ஆபரேஷன் டிஸ் ஆர்ம்" நடத்தி, 6,112-க்கும் மேற்பட்ட ரவுடிகள் சுத்தி வளைக்கப்பட்டார்கள். "ஒருமாத சிறப்பு கஞ்சா வேட்டை" மேற்கொள்ளப்பட்டு 9,498 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பவர்கள் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள். பள்ளி கல்லூரிகள் வட்டாரத்தில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதை நாம் அடியோடு தடுத்திருக்கிறோம். அதைக் கடுங்குற்றமாக்க சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டு வருகிறது. ரவுடிகளை ஒடுக்க, கூலிப்படைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மாநிலத்தில் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியதால்தான் இன்றைக்கு தொழில் வளர்ச்சியில், புதிய முதலீடுகளை நம்மால் ஈர்க்கமுடிகிறது. புதிய அத்தியாயத்தை இந்த அரசு எழுதிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏழு மாதங்களில் மூன்று முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியிருக்கிறோம். அதன்மூலம் 56, 230 கோடி அளவிலான முதலீடுகள் திரட்டப்பட்டிருக்கின்றது. 1 லட்சத்து 74 ஆயிரத்து 999 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்ற 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. இதில், இதுவரை 21 ஆயிரத்து 508 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. மேலும், மாநிலத்தில் திட்டமிட்டப் பாதையில் தொழில் வளர்ச்சியை கொண்டு செல்ல வேண்டுமென்ற நோக்கத்தோடுதான் தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கையும், வெளியிடப்பட்டிருக்கின்றது. ஒரகடத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் மருத்துவக் கருவிகள் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. நாட்டுக்கே முன்னோடியாக தூத்துக்குடியில் மாபெரும் அறைகலன் பூங்கா 1,100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு பூங்காங்கள்மூலம் மட்டும் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட இருக்கின்றது. 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு லட்சம் கோடி டாலர் என்கிற இலக்கை எட்டுவதற்காகத்தான் நாங்கள் தினமும் உழைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற அரசு நலத் திட்ட நிகழ்ச்சிகளில், பல நிகழ்ச்சிகளுக்கு நானே நேரிடையாகச் சென்று கலந்து கொண்டிருக்கிறேன். 714.13 கோடி ரூபாய் மதிப்பிலான 185 அரசுத் திட்டப் பணிகளை தொடங்கி வைத்துள்ளேதோடு, 339.86 கோடி ரூபாய் மதிப்பிலான 190 புதிய திட்டங்களுக்கு நாங்கள் அடிக்கல் நாட்டியிருக்கிறோம். மேலும், பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 8 இலட்சத்து 18 ஆயிரத்து 835 பயனாளிகளுக்கு 3 ஆயிரத்து 642 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளேன்.

ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டியுள்ளபடி, ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பது இந்த அரசினுடைய கொள்கையாகும். தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம், 1956-ல் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம், 27 ,432 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குப் பெறப்பட்ட 543 கோடி ரூபாயில், கோவிட் தடுப்பு நிவாரணப் பணிகளுக்காக 541.64 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ். 2 இலட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. மகளிருக்கு பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம் நல்ல பலனைத் தந்திருக்கிறது. 40 விழுக்காடாக இருந்த மகளிர் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 61 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.இந்த நிதியாண்டில், 4 இலட்சத்து 2 ஆயிரத்து 829 பேர் கொண்ட 29 ஆயிரத்து 425 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆக்கிரமிப்பிலிருந்த 1,628 கோடி ரூபாய் மதிப்பிலான 432 ஏக்கர் பரப்பளவிலான திருக்கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை, விதி 110-ன் கீழான அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தருணங்களில் இந்த 8 மாதங்களில் வெளியிடப்பட்ட 1,641 அறிவிப்புகளில், 1,238 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 75 விழுக்காடு அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 24 விழுக்காடு அறிவிப்புகள், அதாவது, 389 அறிவிப்புகளைச் செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பல்வேறு கட்டங்களில் இருக்கின்றன. 1 விழுக்காடு அறிவிப்புகள், அதாவது 14 அறிவிப்புகள் மட்டும் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளன" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x