Published : 07 Jan 2022 07:00 PM
Last Updated : 07 Jan 2022 07:00 PM

அரசுப் பள்ளிகளின் வரலாற்றில் ஸ்மார்ட் க்ளாஸ் மாபெரும் கல்விப் புரட்சியை உருவாக்கும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை:"தமிழகத்தின் 24,345 தொடக்கப் பள்ளிகளிலும் 'ஸ்மார்ட் கிளாஸ்' எனப்படும் திறன்மிகு வகுப்பறைகள் தொடங்கப்படும். அரசுப் பள்ளிகளின் வரலாற்றில் இது ஒரு மாபெரும் கல்விப் புரட்சி" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து பேசியது: "கடந்த ஆளுநர் உரையில் 66 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் 49 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது என்பதை பெருமையோடு பதிவு செய்கிறேன்.

மீதமுள்ள 17 அறிவிப்புகளில் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளவை 3. இன்னும் அரசாணை வெளியிட வேண்டிய அறிவிப்புகள் 14 என்ற நிலையில் உள்ளது. இவை ஏதோ அறிவிப்புகளாக மட்டுமல்ல; வெளியிட்ட அறிவிப்புகளில் 6 மாதத்தில் 75 விழுக்காடு அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு விட்டது. ஆகவே, இந்த அரசு அறிவிப்போடு நிற்பது இல்லை. எல்லா அறிவிப்புகளையும் ஆணைகளாக வெளியிடுகிற அரசு என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினோம். குறுகிய காலத்தில் அவற்றில் பெரும்பாலான வாக்குறுதிகளுக்கு ஆணைகள் வெளியிடப்பட்டு அவை படிப்படியாக நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.

தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் என்பது ஐந்து ஆண்டுகள். அந்த ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவோம் என்பதுதான் தேர்தல் அறிக்கையின் சாராம்சம். ஆனால் பெரும்பாலான வாக்குறுதிகளை 5 மாத காலத்திலே நிறைவேற்றியுள்ள ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி என்பதை இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

நீங்கள் இந்தத் தேர்தல் வாக்குறுதிகளை என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். கேட்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் கேட்பதற்கு முழு உரிமை பெற்றவர்கள் எங்களுக்கு வாக்களித்தவர்கள். ஏனென்றால் நம்பி எங்களுக்கு வாக்களித்தார்கள். அவர்கள் கேட்க வேண்டும். ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள். பரவாயில்லை. ஏன் பராவாயில்லை என்று சொல்கிறேன் என்றால், வாக்காளர்களுக்கு அந்த அவநம்பிக்கை ஏற்படவில்லை. ஆகையால் அவர்கள் எங்களை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள் என்ன ஆயிற்று என்று? நான் முன்பே சொல்லியிருக்கின்றபடி படிப்படியாக முறையாக உரிய காலத்தில் உரிய அளவிற்கு நிச்சயமாக அது நிறைவேற்றப்படும். உடனே இல்லை, எல்லாம் மொத்தமாக இல்லை, எதையாவது விட்டுவிடுவீர்களா, அதுவும் இல்லை என்றால் நிறைவேற்றப்படுமா? உரிய காலத்தில் முறையாக, படிப்படியாக, அதற்கென்ன தேவை, எது முதலில், எது இரண்டாவது, எது மூன்றாவது என்ற 'ப்ரியாரிட்டி' தேவை. எல்லோரும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படியான அண்ணாவின் விளக்கத்தை அனைவரும் ஆய்ந்து சிந்தித்துப் பார்த்து ஏற்க வேண்டும் என்று நான் மிகுந்த அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

80,138 இல்லம் தேடி கல்வி மையங்கள்: கரோனாவால் குழந்தைகள் பள்ளிகளில் படிக்க முடியாததால் கற்றல் இழப்புப் பிரச்சினை பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. அந்தக் கவலையைப் போக்க வந்ததுதான் “இல்லம் தேடி கல்வி” என்கிற திட்டம். 200 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 12 மாவட்டங்களில் முன்மாதிரி அடிப்படையில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

80,138 இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 80,000 அலுவலர்களைப் பயன்படுத்தி, ஜி.பி.எஸ். செயலி வாயிலாகக் கணக்கெடுத்து, இன்றைக்கு 1 லட்சத்து 73 ஆயிரத்து 792 இடைநின்ற குழந்தைகள், அவரவர் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

“மக்களைத் தேடி மருத்துவம்” என்கிற மகத்தான திட்டம். மருத்துவ சேவையை மக்களின் இல்லத்திற்கே கொண்டு சேர்க்கின்ற திட்டம்தான் இது. 257 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 43 லட்சத்து 66 ஆயிரத்து 518 பேர் பயனடைந்திருக்கிறார்கள். மாநிலமெங்கும் மருத்துவ முகாம்கள் நடத்தி, இந்த முன்னோடித் திட்டம், இன்றைக்கு மக்களின் “இல்ல மருத்துவமனைகள்” போல செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசாங்கப் பள்ளிக்கூடங்களை அனைவரும் விரும்பும் பள்ளிக்கூடங்களாக மாற்றிட இந்த அரசு முனைப்போடு செயலாற்றிக் கொண்டிருக்கிறது. நான், சென்னை மாநகர மேயராக இருந்தபோது மாநகராட்சிப் பள்ளிகளை அந்தளவுக்கு தரம் உயர்த்தி நான் மேம்படுத்தினேன் என்பது உங்களுக்கே தெரியும். அதேபோல, தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து அரசாங்கப் பள்ளிகளையும் நாங்கள் விரைவில் மேம்படுத்துவோம் என்பது உறுதி. அதனால், இந்த ஆளுநர் உரையில் மிக மிக முக்கியத் திட்டமாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் “ஸ்மார்ட் கிளாஸ்” என்கிற திட்டம் - அதாவது திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்குகின்ற திட்டம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

தமிழ்நாட்டிலுள்ள 24 ஆயிரத்து 345 தொடக்கப் பள்ளிகளிலும் திறன்மிகு வகுப்பறைகள் தொடங்கப்படும். அரசுப் பள்ளிகள், அந்தப் பள்ளிகளின் வரலாற்றில் - இது ஒரு மாபெரும் கல்விப் புரட்சியை உருவாக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் - இந்தியாவிற்கே முன்னோடியாக செயல்படுகின்ற பெயரை எட்டிட இந்த அரசு தனது அனைத்து சக்தியையும் பயன்படுத்தும் என்பதை நான் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் முதல்வர் ஸ்டாலின்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x