கூட்டுறவு சங்க முறைகேடுகள்; அதிமுக மட்டுமல்ல திமுகவுகவும் பொறுப்பேற்கவேண்டும்: தினகரன் ட்வீட்

டிடிவி தினகரன் | கோப்புப் படம்.
டிடிவி தினகரன் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: கூட்டுறவு சங்க முறைகேடுகளுக்கு அதிமுகவுக்கு மட்டுமல்ல; திமுகவுக்கும் பொறுப்புண்டு என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரைத்தார். பின்னர், கூட்டுறவுத்துறையில் மோசடிகள் நடந்துள்ளதாகக் கூறி அதிமுக ஆட்சியில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து கூட்டுறவு சங்கங்களை கலைப்பது குறித்த சட்டமசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் 5 ஆண்டுகள் என்ற பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாகக் குறைக்கும்வகையில் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், ''கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில்தானே இயங்கிக் கொண்டிருக்கின்றன. 1983ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் விதிமுறைகளை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?'' என்று கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:

நிதி மோசடிகள் நடைபெற்றதாகக் கூறி தமிழகத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்பை கலைக்க சட்டம் கொண்டுவந்துள்ள திமுக அரசு, அத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? முன்பு நடத்தப்பட்ட கூட்டுறவுத் தேர்தலில் பழனிசாமி கம்பெனியோடு 60:40 பங்கீட்டில் திமுகவினர் சேர்ந்து கொண்டுதானே ஏறத்தாழ எல்லா கூட்டுறவு சங்கங்களிலும் பதவிக்கு வந்தார்கள்?

அப்படியென்றால், கூட்டுறவு சங்கங்களில் நடந்திருப்பதாக தற்போதைய திமுக அரசு கூறும் மோசடிகளில் அவர்களது கட்சியினருக்கும் பொறுப்பு இருக்கிறதல்லவா? எந்தெந்தக் கூட்டுறவு சங்கங்களில் என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றன? அதற்கு காரணமானவர்கள் யார்? என்பதைப் பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அதைச் செய்யாமல் கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலத்தை குறைப்பதாலோ, பதவிகளின் பெயர்களை மாற்றுவதாலோ அவற்றில் மலிந்திருக்கிற சீர்கேடுகளைச் சரிசெய்ய முடியாது. மாறாக, கூட்டுறவு சங்கங்களை மொத்தமாக தி.மு.க.வினர் கபளிகரம் செய்துகொள்ளவதற்கே அரசின் இந்த நடவடிக்கை வழிவகுக்கும்.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in