Published : 22 Apr 2016 08:03 AM
Last Updated : 22 Apr 2016 08:03 AM

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் கட்சிகள்: தேர்தல் களத்தில் சூடு பறக்கும் பிரச்சாரம்

கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க தயாராகிவிட்டனர் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர்கள். தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் நேருக்கு நேர் களம் காணும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்

இத்தொகுதியில் திமுக வேட்பாளராக தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான ஜெ.அன்பழகன், அதிமுக வேட்பாளராக சென்னை 121-வது வார்டு கவுன்சிலர் ஏ.நூர்ஜஹான், தேமுதிக வேட்பாளராக வெ.அப்துல்லாஹ் ஷேட், பாமக வேட்பாளராக ஏவிஏ கசாலி, பாஜக வேட்பாளராக ஏபிஎன் தாமரை கஜேந்திரன், நாம் தமிழர் வேட்பாளராக சிவக்குமார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இதுநாள்வரை கூட்டணிக் கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டுவந்த வேட்பாளர்கள், தற்போது நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு கேட்கத் தொடங்கிவிட்டனர். காலை 7 மணிக்கெல்லாம் கிளம்பி, தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு கேட்கின்றனர்.

தீவிர பிரச்சாரம் தொடக்கம்

சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ் வரர் கோயில் முன்பு பாஜக வேட்பாளர் ஏபிஎன் தாமரை கஜேந்தி ரனுக்கு வாக்குகள் கேட்டு தேர்தல் பிரச்சாரத்தை பாஜக தேசியக் குழு உறுப்பினர் இல.கணேசன் நேற்று தொடங்கிவைத்தார். சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் அம்மா நகர், காக்ஸ் காலனி, கோயில் குடிசைப் பகுதி, படவேட்டம்மன் கோயில் பகுதி, மேற்கு கூவம் குடிசைப் பகுதி, ராக் தெரு குடிசைப் பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு ஆதரவாளர்களுடன் சென்று அவர் வாக்கு கேட்டார்.

சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்கா அருகே பாமக மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி நேற்று பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். பாமக வேட்பாளர் ஏவிஏ கசாலி அப்பகுதியில் உள்ள நெடுஞ்செழியன் நகர், மேற்கு கூவம் ஆறு சாலை, சாக்ஸ்கொயர் தெரு, பாலகிருஷ்ண பிள்ளை தெரு, வேதகிரி தெரு, அக்ரஹாரம் தெரு, அய்யா தெரு, பழனியாண்டவர் கோயில் தெரு, அருணாச்சலம் தெரு, பம்பிங் ஸ்டேஷன் தெரு ஆகிய பகுதிகளில் வீடுதோறும் சென்று வாக்குகள் சேகரித்தார்.

நிறைவேற்றிய திட்டங்கள்

திமுக வேட்பாளர் ஜெ.அன் பழகன் ராயப்பேட்டை ஜானி ஜான்கான் தெரு, வி.எம்.தெரு, லாயிட்ஸ் காலனி, திருவல்லிக் கேணி, மீனவர் குப்பம், மாட்டாங் குப்பம் ஆகிய பகுதிகளில் வாக்கு களைச் சேகரித்தார். ‘‘சட்டப் பேரவை உறுப்பினராக நான் இத்தொகுதிக்கு நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி யுள்ளேன். மீண்டும் எனக்கு வாக்களித்தால், தொகுதியில் போக்குவரத்து வசதிகள், சுகாதாரம், பள்ளிக்கூடம் தரம் உயர்த்துதல், அரசு பாலிடெக் னிக் கொண்டு வருதல், மெரினா கடற்கரையை உலகத்தரத்தில் சீரமைத்தல் ஆகியவற்றை செயல் படுத்துவேன்’’ என்று வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்டார்.

5 ஆண்டு சாதனை

‘‘கடந்த 5 ஆண்டுகால தமிழக அரசின் சிறப்பான மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் தொடர வாக்களியுங்கள்’’ என்று கூறி வாக்குகள் கேட்டு வருகிறார் அதிமுக வேட்பாளர் ஏ.நூர்ஜஹான். ராயப்பேட்டை பகுதியில் உள்ள அவ்வை சண்முகம் சாலை, லாயிட்ஸ் சாலை, ரத்தினம் தெரு, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் வாக்குகளைச் சேகரித்தவர், திறந்த வேனில் நின்றபடி அரசின் திட்டங்களைச் சொல்லியும் பிரச்சாரம் செய்தார்.

‘‘திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தேமுதிக வேட்பாளரான என்னை ஆதரியுங்கள்’’ என்று தேமுதிக வேட்பாளர் வெ.அப்துல்லாஹ் ஷேட் பிரச்சாரம் செய்தார். திருவல்லிக்கேணி பெரிய மசூதிக்கு வெளியே நின்றுகொண்டு, தொழுகைக்கு வந்தவர்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். வெள்ளிக்கிழமை (இன்று) முதல் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக கூறினார்.

இஸ்லாமியர் வாக்குகள்

இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் தொகுதி என்பதால் அதிமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களையே வேட்பாளராக களமிறக்கியுள்ளன.

இத்தொகுதி சேப்பாக்கம் தொகுதியாக இருந்தவரை தொடர்ந்து திமுக வேட்பாளர்களே இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றியை திமுக தக்கவைக்குமா, இதர கட்சிகள் தட்டிப் பறிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x