

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரும் 13-ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சொர்க்க வாசல் திறப்பின்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் துணை ஆணையர் (பொறுப்பு) கவெனிதா நேற்று கூறியதாவது:
வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பகல்பத்து உற்சவம் கடந்த 3-ம் தேதி தொடங்கி வரும் 12-ம் தேதி வரை நடக்க உள்ளது. 13-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறக்கப்பட உள்ளது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அன்று காலை 6 மணி வரை உபயதாரர்கள், கட்டளைதாரர்கள், பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. கோயிலுக்கு வெளியே பெரிய திரைகள் அமைத்து, பரமபத வாசல் திறப்பு நிகழ்வை பக்தர்கள் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, காலை 6.15 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இலவச தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் என்று 2 வரிசைகள் பின்பற்றப்படும். கட்டண தரிசனத்தில் செல்ல விரும்புவோர் அன்று கோயிலுக்கு நேரடியாக வந்து ரூ.100 செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்ந்து, இராப்பத்து உற்சவம் 23-ம் தேதி வரை நடக்க உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் பகல்பத்து, இராப்பத்து உற்சவங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. மற்ற கிழமைகளில் காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
பொதுவாக, வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள மாட வீதிகளில் சுவாமி வீதிஉலா நடைபெறும். தற்போது ஆகம விதிகளின்படி, இதை கோயில் வளாகத்துக்குள் நடத்த உள்ளோம். தொலைக்காட்சி, யூ-டியூப் மூலம் இந்த நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
இயல்பு நிலை திரும்பும் வரை, கோயிலின் உள்பகுதியில் நடைபெறும் புறப்பாடு, உற்சவங்களில் பக்தர்கள், உபயதாரர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.
பாதுகாப்பு பணியில் சுமார் 500 போலீஸார் ஈடுபட உள்ளனர். தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்படும். முகக் கவசம் அணியாமல் வருவோர் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. பக்தர்களின் கைகளை சானிடைசரால் சுத்தம் செய்து, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே, கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
தேங்காய், பூ, பழம், துளசி ஆகியவற்றை கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சுவாச நோய், இதய நோய் போன்ற இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோர் உடல்நலன் கருதி தரிசனத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.