

புதுச்சேரியில் 50 சத தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது. முழு ஊரடங்கு என ஆளுநர் பெயரை குறிப்பிட்டு தவறான தகவல் பரப்பியவர்களை கண்டறிய சைபர் க்ரைம் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஆட்சியர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
புதுச்சேரியில் கரோனா, ஒமைக்ரான் சூழலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமலாகிறது. முழு ஊரடங்கை தவிர்க்க நடவடிக்கை எடுக்கிறோம்.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலாகிறது.
எல்லைகளில் கண்காணிப்பை அதிகரிக்கிறோம். தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதிக்கும் வகையில் கண்காணிப்பு இருக்கும். பேருந்துகள், வாகனங்களில் வருவோர் தடுப்பூசி போட்டுள்ளார்களா என்பதை கண்டிப்பாக கண்காணிக்க உள்ளோம். தேவையெனில் கரோனா பரிசோதனை செய்வோம்.
மால்கள், சந்தைகள், கடைகள் ஆகியவற்றில் போதிய காற்று வசதியை உறுதி செய்து 50 சதவீத பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
மாவட்டத்துக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடை யிலான பொது போக்குவரத்திலும் 50 சத இருக்கை வசதிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். திரையரங்குகள், மல்டி பிளக்ஸ்களில் 50 சத இருக்கை வசதி உடன் மட்டுமே செயல்படவேண்டும். உணவகம், ஹோட்டல்கள், பார்கள், மதுபானக்கடைகள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் 50 சத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். ஆடிட்டோரியம், கலையரங்கம் ஆகியவற்றிலும் 50 சத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
அதேபோல் பியூட்டி பார்லர், சலூன், ஸ்பா, உடற்பயிற்சிகூடம், யோகா பயிற்சி மையம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
குடமுழக்கில் அனுமதியில்லை
கோயில்களில் குடமுழுக்கு, கும்பாபிஷேகம் ஆகியவற்றை பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்பின்றி அர்ச்சர்கள் மட்டுமே நடத்த வேண்டும்.
கோயில்களில் பக்தர்கள்அனுமதியில் தற்போதைய நடைமுறை பின்பற்றப்படும்.
சொர்க்கவாசல் திறப்புநிகழ்வு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் பக்தர்கள் பங்கேற்பு தொடர்பாக விரைவில் தெரிவிக் கப்படும்.
கல்லூரிகள், பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் கல்வித்துறை வழிகாட்டுதல்படி கரோன தடுப்பு முறைகளின் படி செயல்படும். இவ்வுத்தரவுகள் நேற்று முதல் (ஜன 6) வரும் ஜன31-ம் தேதி வரை அமலில் இருக்கும்.
முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம். அதை கடைபிடிக்காவிட்டால் ரூ.100 அபராதம் நடைமுறை அமலாக்க வேண்டிய சூழல்வரும். முழு ஊரடங்கு வரவுள்ளதாக ஆளுநர் பெயரைக்குறிப்பிட்டு தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். இதுபற்றி சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர். தவறான தகவலை யாரும் பரப்பாதீர்கள். என்று தெரிவித்தார்.
சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு கூறுகையில், "ஒமைக்ரான் தொற்று புதுச்சேரியில் இருவருக்கு மட்டுமே உறுதியாகி சரியானது. இதுவரையில் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய பெங்களூரு ஆய்வகத்துக்கு 126 பேரின் மாதிரிகளை அனுப்பியுள்ளோம்" என்றார்.