

18 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில் இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் உட்பட 6 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியன் வங்கியின் தலைவராக எம்.கோபாலகிருஷ் ணன் இருந்தபோது 1998-ம் ஆண்டு ‘கிரேன் இன்னோவேஷன்’ என்ற தனியார் நிறுவனத்தின் சென்னை, டெல்லி கிளைகளுக்கு இந்தியன் வங்கி பல்வேறு கடன்களை வழங்கியது. இந்த நிறுவனம் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் வாங்குவதற்கு இந்தியன் வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்தியன் வங்கிக்கு ரூ.5 கோடியே 51 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக சிபிஐ பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவுக்கு பலரும் புகார் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், தனியார் நிறுவன நிர்வாகிகள் ராஜீவ் பத்ரா, கிரேன் பத்ரா, இந்தியன் வங்கியின் அப்போதைய தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன், வங்கி நிர்வாகிகள் சீனிவாசன், அஜீஸ், சண்முகசுந்தரம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. பின்னர், சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 18 ஆண்டுகளாக இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் நீதிபதி ஏ.கந்தகுமார் நேற்று முன்தினம் பிறப்பித்த தீர்ப்பு விவரம்:-
இவ்வழக்கில் குற்றம் சுமத்தப் பட்டவர்களின் குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவன நிர்வாகிகள் ராஜீவ் பத்ரா, கிரேன் பத்ரா ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.32 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன், வங்கி அதிகாரிகள் சீனிவாசன், அஜீஸ், சண்முகசுந்தரம் ஆகி யோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி கந்தகுமார் தீர்ப்பளித்தார்.