

கரோனா தொற்று பரவும் சூழலில் புதுச்சேரியில் தேசிய இளைஞர் தினவிழா நடக்க எதிர்ப்பு கிளம்பியது. இதனால், பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை ரத்தாகியுள்ளது. இணையத்தில் பிரதமர் தொடங்கி வைத்து இந்நிகழ்வு 3 நாட்கள் நடத்தப்படவுள்ளது.
‘புதுச்சேரியில் தேசிய இளைஞர் திருவிழா வரும் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் இருந்து 7,500 பேர் இந்நிகழ்வில் பங்கேற்பதாக இருந்தது. அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று இந்நிகழ்வை தொடங்கி வைக்க உள்ளார் என்றும் துணை நிலைஆளுநர் தமிழிசை தெரிவித்தி ருந்தார்.
மேலும் இளைஞர் தின விழாவிற்கான லோகோவை புதுச்சேரியில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டப் பேரவை தலைவர் செல்வம் ஆகி யோர் வெளியிட்டனர்.
தற்போது கரோனா, ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் சூழலில் இந்நிகழ்வை புதுச்சேரியில் நடத்த திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
புதுச்சேரியில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் பல மாநிலங்களில் இருந்து 7,500 பேர் புதுச்சேரி வருவது தொடர்பாகவும், அசாதாரண சூழலில்தேசிய இளைஞர் தினவிழா நடப்பதுபற்றியும் ஆட்சியர் வல்லவனிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் நடைபெறும் தேசிய இளைஞர் தின விழாவை நேரடியாகவா அல்லது இணைய வழி வாயிலாகவா என்பதில் எந்த வகையில் நடத்துவது என்பது குறித்து மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. புதுச்சேரிக்கு பிரதமர் வருவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு இதுவரை எந்தவித தகவலும் இல்லை" என்று குறிப்பிட்டார்.
விரைவில் அறிவிப்பு
பாஜக வட்டாரங்களில் விசாரித்த போது, "தேசிய இளைஞர் தினவிழா வில் பங்கேற்க பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வரவில்லை." என்று குறிப்பிட்டனர்.
தலைமைச்செயலக வட்டாரங் களில் விசாரித்தபோது, "தேசிய இளைஞர் தினவிழாவை இணையத்திலேயே பிரதமர் மோடி தொடங்கிவைப்பார் என எதிர்பார்க்கப்படு கிறது.
மத்திய அரசு இதற்கான முறையான அறிவிப்பை விரைவில் வெளியிடும். முன்பு ஐந்து நாட்கள் இவ்விழா நடப்பதாக இருந்தது.
தற்போது 3 நாட்கள் மட்டுமே நடக்கும். அனைத்து மாநில தலைமைச்செயலர்களின் கோரிக் கையினால் இணைய வழியில் அந்த மாநிலங்களில் இருந்தே இளையோர் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
அதனால் இதர மாநிலங்களில் இருந்து யாரும் புதுச்சேரிக்கு வரவில்லை. அத்துடன் தொற்றின் சூழலை பொருத்து அக்காலத்தில் முடிவுகள் எடுக்கவும் வாய்ப்புள்ளது" என்று குறிப்பிட்டனர்.