

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளி மாநில, மாவட்ட சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தர விட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கரோனா தொற்று பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2-ம் தேதிக்கு முன்பு வரை தொற்று பரவல் எண்ணிக்கை 20-க்கும் குறைவாக இருந்தது. அதன் பிறகு தொற்று பரவல் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியதால் கடந்த 3-ம் தேதி 71 ஆகவும், 4-ம் தேதி 87 ஆகவும், 5-ம் தேதி 208 ஆகவும் இருந்த நிலையில் நேற்று 273 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், வேலூர் மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு பேருந்து, ரயில் மற்றும் இதர வாகனங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு யாருக்கும் அனுமதியில்லை. இது தொடர்பாக மாவட்ட எல்லையில் காவல் துறையினர் மூலம் கண் காணிக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு அபராதம்விதிக்கப்படும். கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் கடைக்கு வந்தால் அவர்களுக்கு எந்தவித பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது’’ என தெரிவித்துள்ளார்.
தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் காவலர்களின் பாதுகாப்பு எண்ணிக்கையை அதிகரித்து வாகனங்களில் வருபவர்களை தீவிரமாக விசாரித்த பிறகே அனுமதிக்கின்றனர்.