

திருச்சி: கொலைக் குற்றச் சம்பவங்களில் சிறுவர்கள் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் திருச்சியில் கிராமந்தோறும் "காவல் சிறுவர் மன்றம்" ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று காவல்துறை மத்திய மண்டலத் தலைவர் வே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையின் மண்டலங்களுக்கு இடையிலான 61-வது குழு விளையாட்டுப் போட்டிகள் இன்று திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கின. காவல் துறையின் மத்திய மண்டலத் தலைவர் வே.பாலகிருஷ்ணன் போட்டிகளைத் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
”ஜன.9-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில் காவல் துறையின் ஆயுதப் படை, கமாண்டோ படை, மத்திய, மேற்கு, தெற்கு, வடக்கு, சென்னை ஆகிய 7 மண்டலங்களைச் சேர்ந்த காவல் துறை விளையாட்டு வீரர்கள்- வீராங்கனைகள் சுமார் 500 பேர் பங்கேற்றுள்ளனர். கைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி உட்பட 9 விளையாட்டுப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தப் போட்டிகள் கடந்த ஆண்டு கரோனா பரவலால் நடத்தப்படாத நிலையில், நிகழாண்டு கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படுகிறது.
மத்திய மண்டலத்தில் கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொலைக் குற்றங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் 8 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல், 2020-ல் 27 ரவுடிகள் கொலைச் சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், 2021-ல் 18 ரவுடிகள் கொலைச் சம்பவங்கள் நடைபெற்றன. நிகழாண்டில் ஒரு கொலையும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காவல் துறையின் குறிக்கோள்.
அதேபோல், கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகைப் பொருட்களுக்கு எதிராக முழு வீச்சில் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதிலும், முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் அதிக அளவு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் காவல்துறை பறிமுதல் செய்யதுள்ளது. இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் வகையில் காவல்துறை செயல்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விரைவில் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்.
சில கொலைக் குற்றச் சம்பவங்களில் சிறுவர்களும் ஈடுபடுகின்றனர். பழைய குற்றவாளிகள் அவர்களைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. இருப்பினும், கொலைக் குற்றச் சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கொலைக் குற்றச் சம்பவங்களில் சிறுவர்கள் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் கிராமந்தோறும் "காவல் சிறுவர் மன்றம்" ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. படிக்கும் நேரத்துக்குப் பிறகு எஞ்சிய நேரங்களில் அவர்களைப் புத்தக வாசிப்பு, விளையாட்டு போன்ற நற்செயல்களில் ஈடுபடுத்தவுள்ளோம்.
காவல்துறை தலைமை இயக்குநர் அறிவுறுத்தலின்படி, பிரச்சினைக்குரிய இடங்கள் மற்றும் பிரச்சினை நேரிடக்கூடிய நேரங்களின்போது காவல் துறையினர் ஆயுதங்களை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்குக்கு மக்கள் ஏற்கெனவே பழகியுள்ளனர். எனவே, அரசின் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் காவல்துறைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.