

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா மையங்களில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தமிழகத்தில் கரோனா பரவலை அடுத்து புதிய கட்டுபாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் உட்பட புதிய கட்டுபாடுகள் இன்று முதல் அமலானது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா மையங்களில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி 10 நாட்களில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தடுப்பு நடவடிக்கையாக உதகை தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் கரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என பூங்கா ஊழியர்கள் விசாரணை செய்தனர். அத்துடன் அதற்கான சான்றிதழ் சரி பார்க்கப்பட்ட பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்கான சான்றிதழ் நகலை காட்டிவிட்டு சென்றனர். சிலர் செல்போனில் வைத்திருந்த சான்றிதழை காட்டினார்கள். முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 2-வது டோஸ் செலுத்த குறிப்பிட்ட நாட்கள் பூர்த்தியாகாமல் இருப்பவர்களும், 2 டோஸ் செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டு குறிப்பிட்ட நாட்கள் கழித்தும் 2-வது தடுப்பூசி செலுத்தாதவர்கள் பூங்காவுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அத்துடன் அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அதுபோன்று ஊட்டியில் உள்ள மற்ற சுற்றுலா மையங்களுக்கு செல்பவர் கள் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசி போடாமல் வருபவர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்று வருகிறார்கள். சிலர் அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் கூறும்போது, ”நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க சுற்றுலா மையங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து, அருகே உள்ள மையங்களில் செலுத்தப்படுகிறது. அதேபோல் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் தடுப்பூசி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்றார்.