பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு: பஞ்சாப் அரசே பொறுப்பு: சிடி ரவி குற்றச்சாட்டு

தமிழக பாஜக மேலிட பார்வையாளர் சி.டி.ரவி
தமிழக பாஜக மேலிட பார்வையாளர் சி.டி.ரவி
Updated on
1 min read

மதுரை: காங்கிரஸ் கட்சியின் உள் எண்ணத்தை பஞ்சாப் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது என தமிழக பாஜக மேலிடப் பார்வையாளர் சி.டி.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் மகாத்மா காந்தி அரையாடைக்கு மாறிய மேலமாசி வீதியுள்ள காதிகிராப்ட் அலுவலகத்தை தமிழக பாஜக மேலிட பார்வையாளர் சி.டி.ரவி இன்று பார்வையிட்டார். பாஜக மாநில பொதுச் செயலர் ஸ்ரீனிவாசன், மாவட்ட துணைத் தலைவர் ஹரிகரன், ஊடகப் பிரிவு தலைவர் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பஞ்சாப் மாநிலத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடி திரும்ப அனுப்பப்பட்ட சம்பவம் மிகுந்த கண்டனத்துக்குரியது. அங்கு தேசிய பாதுகாப்பு அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் பிரதமர் கார் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பிரதமர் 20 நிமிடம் காத்திருந்துள்ளார். இதற்கு அம்மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

பிரதமர் ஒரு மாநிலத்துக்கு செல்லும் போது, பிரதமரின் நிகழ்ச்சி நிரல், பிரதமர் செல்லும் பயணப் பாதையை முடிவு செய்வது அந்த மாநில அரசு தான். அந்த வகையில் பாதுகாப்பு குறைபாடுக்கு பஞ்சாப் அரசு தான் பொறுப்பு. இந்த சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியின் உள் எண்ணம் வெளிப்பட்டுள்ளது. பிரதமர் உயிர் பாதுகாப்புக்கும், அவரின் நீண்ட ஆயுளுக்காகவும் மிருதுஞ்சய ஹோமம் செய்து வருகிறோம். உள்ளூர் அளவிலும் பல்வேறு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.

தமிழகத்திற்கு மத்திய அரசு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை வழங்கியுள்ளது. இந்தளவு மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு வேறு எந்த மாநிலத்துக்கும் அளிக்கவில்லை. பிரதமர் மோடி எப்போதும் தமிழகத்தின் நண்பன். தமிழகத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் எப்போதும் துணை நிற்பார். பிரதமரின் தமிழக வருகையின் போது, 'வெல்கம் மோடி' என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in