Published : 06 Jan 2022 01:57 PM
Last Updated : 06 Jan 2022 01:57 PM

மதுரையிலுள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறந்திடுக: ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: மதுரையிலுள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின்‌ தென்‌ மாவட்டங்களில்‌ உள்ள கரும்பு விவசாயிகளின்‌ தேவையைப்‌ பூர்த்தி செய்யும்‌ ஒரே கூட்டுறவு நிறுவனமாக தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை விளங்குவதோடு அந்த ஆலையில்‌ நேரடியாகவும்‌, மறைமுகமாகவும்‌ பணியாற்றும்‌ ஊழியர்களுக்கும்‌ வாழ்வாதாரமாகத்‌ திகழ்கிறது. 2019-20 மற்றும்‌ 2020-21 ஆகிய ஆண்டுகளுக்கான அரவைப்‌ பருவத்தில்‌ போதிய மழையின்மை காரணமாகவும்‌, கரும்புப்‌ பதிவு குறைவாக இருந்ததன்‌ காரணமாகவும்‌ மேற்படி ஆலையை இயக்க முடியாத சூழ்நிலை நிலவியது. ஆலையை இயக்க முடியாத நிலை இருந்தபோதிலும்‌, விவசாயிகளின்‌ நலன்‌ கருதி பல்வேறு காலகட்டங்களில்‌ 22 கோடியே 16 லட்சம்‌ ரூபாய்‌ நிலுவைத்‌ தொகை வழங்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல்‌, ஆலைத்‌ தொழிலாளர்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு 2018ஆம்‌ ஆண்டு ஏப்ரல்‌ மாதம்‌ முதல்‌ 2020ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதம்‌ வரையிலான நிலுவை ஊதியம்‌ மற்றும்‌ அத்தியாவசிய ஆலை செலவினங்கள்‌ என 17 கோடியே 16 லட்சம்‌ ரூபாய்‌ வழங்கப்பட்டது. ஆக மொத்தம்‌ 39 கோடியே 32 லட்சம்‌ ரூபாய்‌ வழங்கப்பட்டது. நடப்பாண்டில்‌ அதாவது 2021-22ஆம்‌ ஆண்டில்‌ நல்ல மழை பெய்துள்ளதன்‌ காரணமாக கரும்பு மகசூல்‌ அதிகரித்ததையடுத்து 60,000 டன்‌ பதிவு செய்யப்பட்ட கரும்புகளும்‌, 17,000 டன்‌ பதிவு செய்யப்படாத கரும்புகளும்‌ அரவைக்குத் தயார்‌ நிலையில்‌ உள்ளதாகவும்‌, அரவை தொடங்குவதற்கு முன்‌ மேற்கொள்ளப்பட வேண்டிய சுத்திகரிப்புப்‌ பணிகள்‌ 70 விழுக்காடு முடிவடைந்துவிட்டதாகவும்‌, மீதமுள்ள 30 விழுக்காடு பணிகள்‌ மேற்கொள்ள நிதி இல்லாததன்‌ காரணமாக நிறைவடையவில்லை என்றும்‌, ஆலையின்‌ பராமரிப்புச்‌ செலவு, கரும்பு வெட்டுவதற்கு முன்பணம்‌ ஆகியவற்றிற்கு பத்து கோடி ரூபாய்‌ தேவைப்படுவதாகவும்‌, 2021ஆம்‌ ஆண்டு ஜனவரி முதல்‌ டிசம்பர்‌ மாதம்‌ வரையிலான ஆலை ஊழியர்களின்‌ ஊதியத்திற்கு 11 கோடியே 16 லட்சம்‌ ரூபாய்‌ தேவைப்படுவதாகவும்‌ ஆலை நிர்வாகம்‌ தெரிவிப்பதாகக்‌ கூறப்படுகிறது.

2021-2022ஆம்‌ ஆண்டிற்கான அரவைப்‌ பருவத்திற்கு இந்த ஆலையைத் திறப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டும்‌ என்றும்‌, ஆலை பராமரிப்பு ஊதிய நிலுவை என கிட்டத்தட்ட 22 கோடி ரூபாய்‌ அளிக்க வேண்டுமென்றும்‌ ஆலை நிர்வாகத்தின்‌ தலைவர்‌ வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்‌. ஆலை தொடர்ந்து இயங்கும்‌ வண்ணம்‌ 60,000 டன்‌ பதிவு செய்யப்பட்ட கரும்புகளும்‌, 17,000 டன்‌ பதிவு செய்யப்படாத கரும்புகளும்‌ அரவைக்குத் தயார்‌ நிலையில்‌ உள்ளதால்‌ ஆலையை உடனடியாகத் திறக்க வேண்டும்‌ என்று கரும்பு விவசாயிகளும்‌ போராட்டத்தில்‌ ஈடுபட்டுள்ளனர்‌.

இந்த ஆலையை இயக்குவதன்‌ மூலம்‌ 10,000 கரும்பு விவசாயிகளும்‌, 500 தொழிலாளர்களும்‌ நேரடியாகப் பயன்‌பெறுவர்‌ என்பதோடு, கரும்பு வாகனப்‌ போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும்‌ லாரி, டிராக்டர்‌ மற்றும்‌ மாட்டு வண்டி இயக்குபவர்களும்‌, அதைச்‌ சார்ந்த தொழிலாளர்களும்‌, விவசாயக்‌ கூலித்‌ தொழிலாளர்களும்‌, ஒப்பந்தத்‌ தொழிலார்கள்‌, வணிகர்கள்‌ என ஆயிரக்கணக்கானோர்‌. மறைமுகமாகவும்‌ பயன்‌பெறுவார்கள்‌. மேற்படி ஆலையை இயக்க அரசு நிதியுதவி புரிய வேண்டும்‌ என்பதே கரும்பு - விவசாயிகள்‌ மற்றும்‌ ஆலைத்‌ தொழிலாளர்களின்‌ கோரிக்கையாக இருந்து வருகிறது.

எனவே, கரும்பு விவசாயிகள்‌ மற்றும்‌ ஆலைத்‌ தொழிலாளர்களின் நலன்களைக்‌ கருத்தில்‌ கொண்டு, தமிழக முதல்வர் இதில்‌ உடனடியாகத்‌ தலையிட்டு, மதுரையிலுள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில்‌
கேட்டுக்‌ கொள்கிறேன்‌” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x