மெட்ரோ சேவையை வண்டலூர் வரை நீட்டிக்கும் திட்டம்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்

சட்டப்பேரவையில் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: மெட்ரோ சேவையை வண்டலூர் வரை நீட்டிக்கும் திட்டம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. ஆளுநர் சிறப்புரையுடன் நேற்று தொடங்கப்பட்ட சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிமுக, விசிக கட்சிகள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதில், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதி சென்னை மெட்ரோ ரயில் சேவையை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை நீட்டிப்பது தொடர்பாக முதல்வரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார்.

சென்னை மெட்ரோ ரயில் சேவையை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை நீட்டிக்க அரசு ஆவன செய்யுமா? ஆம் எனில், எப்போது? என்ற அவரது கேள்விக்கு, ''வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சென்னை மாநகருக்கான புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக, மெட்ரோ ரயில் இணைப்பை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இதனைக் கருதி, இந்தத் தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் பன்னாட்டு நிறுவனத்தின் மூலமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான இறுதித் திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் தற்போது இருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில், பணிகளைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in