

சாத்தூர்: விருதுநகர் மாவட்ட சாத்தூர் அருகே நேற்று (புதன்கிழமை) காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு கருப்பசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இருக்கின்றது. இங்கு நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு வெடி மருந்தில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் இருந்த இரண்டு அறைகள் இடிந்து தரைமட்டமாகின. விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக ஆலைக்குச் சென்றனர்.
கட்டிட இடிபாடுகளில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டு சிவகாசி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி ஆலை உரிமையாளர் கருப்பசாமி, ஊழியர் செந்தில்குமார் உள்ளிட்ட மூவர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். பின்னர் சிறிது நேரத்திலேயே மேலும் ஒருவர் பலியாகினார். இதனையடுத்து படுகாயமடைந்த மூவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களில் முனுசாமி என்பவர் இன்று (வியாழன்) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இப்போதைக்கு இருவர் சிகிச்சையில் உள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே களத்தூர் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஜனவரி 1 ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளனர்.
ஒரே மாதத்தில் ஐந்து நாட்கள் இடைவெளியில் இருவேறு பட்டாசு விபத்துகளில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சிவகாசி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணமாக தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.