நள்ளிரவில் விருதுநகர் அழைத்துவரப்பட்ட ராஜேந்திர பாலாஜி: டிஐஜி, எஸ்.பி. 3 மணி நேரம் விசாரணை

நள்ளிரவில் விருதுநகர் அழைத்துவரப்பட்ட ராஜேந்திர பாலாஜி: டிஐஜி, எஸ்.பி. 3 மணி நேரம் விசாரணை
Updated on
2 min read

விருதுநகர்: கடந்த அதிமுக ஆட்சியில் வேலை வாங்கி தருவதாக ரூ.3.1 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் தனிப்படை போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

3 மணி நேரம் விசாரணை: இந்நிலையில் அவர் நள்ளிரவு 1.15 மணியளவில் விருதுநகர் அழைத்துவரப்பட்டார். அவரிடம் மதுரை சரக காவல்துறை டிஐஜி காமினி, மாவட்ட எஸ்.பி. மனோகர் உள்ளிட்ட காவல்துறையினர் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் அவர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவர் இன்று காலை விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.3 கோடி மோசடி புகார்: கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவரும் விருதுநகர் மாவட்ட அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனம் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவ.15-ஆம் தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ராஜேந்திர பாலாஜி ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

டிச.17ல் தலைமறைவு: முன்னதாக டிச.17-ம் தேதி தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் விருதுநகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கே.டி.ராஜேந்திரபாலாஜி, போலீஸார் அவரை கைது செய்ய முயன்றதை அறிந்து தலைமறைவானார். அவரை பிடிக்க மாவட்ட எஸ்.பி. மனோகர் உத்தரவின்பேரில் 8 தனிப்படைகள் அமைத்து குற்றப் பிரிவு போலீஸார் அவரைத் தேடி வந்தனர். ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதேவேளையில் தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் தேடுதல் பணி நடைபெற்றது. விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டு, செல்போன் சிக்னல் மூலம் போலீஸார் அவரை கண்காணித்தனர்.

கர்நாடகாவில் பதுங்கல்? இதனிடையே தனிப்படை போலீஸாருக்கு ராஜேந்திர பாலாஜி க‌ர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாகவும், பாஜக பிரமுகர்கள் உதவியோடு காரில் வலம் வருவதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார் நேற்று பி.எம்.சாலையில் காரில் சென்ற ராஜேந்திர பாலாஜியை மடக்கினர். போலீஸாரின் வாகனத்தை பார்த்ததும் தப்பியோட முயன்ற அவரை, போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பாஜக அடைக்கலம்: ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் தந்து, தப்பிக்க உதவியதாக கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக செயலாளர் ராமகிருஷ்ணன், பாஜக நிர்வாகிகள் நாகேஷ், ரமேஷ் உட்ப‌ட 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். கைதான அனைவரையும் தனிப்படை போலீஸார் கார் மூலம் விருதுநகருக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in