

சென்னை: வருங்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையில்லாத, எதற்கும் உதவாத கட்டுக் கதைகளின் கூட்டுத் தொகுப்புதான் ஆளுநர்உரை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர் சித்துள்ளார்.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆளுநர் உரையில் ஏதாவதுஇருக்கிறதா என்று பார்த்தால், விடை பூஜ்யம்தான். அதிமுகஆட்சியில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததற்கு காரணமேதிமுகவும், அதன் இரட்டை வேடமும்தான்.
கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று முதன்முதலில் பிரதமரிடம் நான் கோரிக்கை வைத்தேன். அதைத் தொடர்ந்து மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் இழப்பீடு வழங்குவதை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் இப்போது இழப்பீடு வழங்கப்படுகிறது. உண்மைநிலை இவ்வாறு இருக்க, தமிழகஅரசே முன்வந்து செய்ததைப்போல தோற்றம், ஆளுநர் உரையிலே உருவாக்கப்பட்டிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடு அவர்களுக்கு சென்றடையவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் அவர்களை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விடுவிக்காதது திமுக அரசின் திறமையின்மையைக் காட்டுகிறது.
சென்ற ஆளுநர் உரையில் தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள்பாதிப்படையாமல் இருக்க தேவையான சட்டங்களை நிறைவேற்றி, உரிய நடவடிக்கைகளை இந்தஅரசு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு ஆளுநர் உரையில், நீட் போன்றநுழைவுத் தேர்வுகள் தேவையற்றவை என்ற இந்த அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டிருக்கிறது. அடுத்த ஆளுநர் உரையில் இதுவும்இடம்பெறாது. ஆக, நீட் தேர்வு ரத்துஎன்பது ஒரு ஏமாற்று வேலை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. 7 பேர் விடுதலை குறித்து பேச்சு மூச்சு இல்லை.
திமுக வாக்குறுதிகள் குறித்துஆளுநர் உரையில் எதுவும் தெரிவிக்கப்படாதது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுருக்கமாகச் சொன்னால்வருங்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையில்லாத, எதிர்காலத் தலைமுறையைப் பற்றி சிந்திக்காத, எதற்கும் உதவாத கட்டுக்கதைகளின் கூட்டுத் தொகுப்புதான்ஆளுநர் உரை. இவ்வாறு அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.