

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள முருகன் கோயில்களில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த பண்டிகையாகும். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்றைய தினம் அனுசரிக்கப்பட்டது. முருகன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சென்னை வடபழனி முருகன் கோயிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கே நடை திறக்கப்பட்டு, நாள் முழுவதும் பூஜைகள் நடந்தன.
காலையில் அபிஷேகம், அர்ச்சனை ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காவடி எடுத்தும், பால் குடங்களை சுமந்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இதே போல், பாம்பன் சுவாமிகள் கோயில், வல்லக்கோட்டை, திருப்போரூர், குன்றத்தூர், கந்தகோட்டம் ஆகிய முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.