Published : 06 Jan 2022 12:15 PM
Last Updated : 06 Jan 2022 12:15 PM

நீட் விலக்கு மசோதாவை முடக்கி வைத்திருக்கும்; ஆளுநர் ரவி ராஜிநாமா செய்ய வேண்டும்: நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

சென்னை: நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், அக்கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா, கடந்த செப்.13-ல் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, கடந்த செப். 18-ம்தேதி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுவரை அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கோ, மத்தியஅரசுக்கோ ஆளுநர் அனுப்பிவைக்கவில்லை. மூத்த அமைச்சர்களுடன் ஆளுநரை நேரில் சந்தித்துமுதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியும், ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நீட் விலக்கு மசேதாவை முடக்கி வைத்துள்ளார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

இதன் மீது முடிவெடுக்காமல் தாமதம் செய்வது கண்டனத்துக்குரியது. இதற்கு முழுகாரணம் ஆளுநர்தான். எனவே, ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜிநாமா செய்ய வேண்டும்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து, மனு அளிக்க நேரம்கேட்டிருந்தோம். கடந்த டிச. 29-ம்தேதி சந்திக்க அமித்ஷா நேரம்ஒதுக்கியும், அவரை சந்திக்க முடியவில்லை. பிறகு தொலைபேசியிலும், கடிதம் மூலம் தொடர்பு கொண்டும் அமித்ஷாவை சந்திக்க முடியவில்லை. அரசியல் காரணங்களுக்காக அமித்ஷா எங்களை சந்திக்க மறுப்பதாக நினைக்கிறோம்.

சட்ட மசோதாவை மத்திய உள்துறைக்கு அனுப்பினால்தான், அதன் மீது அமித்ஷா நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், ஆளுநர் மசோதாவை தன்னிடமே முடக்கி வைத்துள்ளார். இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.

பேட்டியின்போது, எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன் (அதிமுக), தொல்.திருமாவளவன் (விசிக), ஜெயக்குமார் (காங்.), சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்) உடனிருந்தனர்.

கே.எஸ்.அழகிரி கண்டனம்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “நீட் விலக்கு மசோதா தொடர்பாக, தமிழக எம்.பி.க்கள் கடந்த 10 நாட்களாக முயற்சித்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடியவில்லை. இது கடும் கண்டனத்துக்குரியது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் முடக்கிவைத்திருப்பது, கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும். மத்திய, மாநில அரசுகளிடையே நல்லுறவை பேணிகாக்க வேண்டிய ஆளுநர்,தமிழகத்துக்கு விரோதமாக செயல்படுவது கண்டனத்துக்குரியது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x