Published : 06 Jan 2022 08:29 AM
Last Updated : 06 Jan 2022 08:29 AM

ரூ.1,000 கோடி செலவில் 1,150 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது: தூத்துக்குடியில் நாட்டின் முதலாவது ‘சர்வதேச பர்னிச்சர் பூங்கா’ - ஜன.11-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்

தூத்துக்குடி: இந்தியாவில் முதலாவதாக தூத்துக்குடியில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில், 1,150 ஏக்கர் பரப்பளவில் 'சர்வதேச பர்னிச்சர் பூங்கா' அமைக்கப்படுகிறது. இந்தப் பூங்கா மூலம் ரூ.4,500கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.

தென் தமிழகத்தில் வளர்ந்து வரும் தொழில் நகரமாக தூத்துக்குடி விளங்குகிறது. இங்கு துறைமுகம், விமான நிலையம், தேசிய நெடுஞ்சாலை, ரயில் என போக்குவரத்து வசதிகள் நிறைந்திருப்பதால், பல்வேறு தொழில் நிறுவனங்கள் தூத்துக்குடியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.

பேரவையில் முதல்வர் அறிவிப்பு

'தூத்துக்குடி சர்வதேச பர்னிச்சர் பார்க்’ திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தார். தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 1,150 ஏக்கர்பரப்பளவில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் இந்த பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பர்னிச்சர் தொழிலுக்கு என நாட்டிலேயே முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாக இந்தப் பூங்கா அமைகிறது. மர அரவை ஆலை, பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 100 நிறுவனங்கள் வரை இந்தப் பூங்காவில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பர்னிச்சர் உற்பத்தி தொடங்கி பேக்கிங் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வரையிலான அனைத்து நிறுவனங்களும் இந்தப் பூங்காவில் இடம் பெறுகின்றன.

3.5 லட்சம் பேருக்கு வேலை

பர்னிச்சர் தொழில் தொடர்பாக ஆண்டுக்கு 5,000 பேருக்கு பயிற்சி அளிக்கும் கூடம், பர்னிச்சர்களின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வுக்கூடம், கூட்ட அரங்கம், வீடியோ கான்பரன்சிங் வசதி, தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் போன்ற அனைத்து வசதிகளும் இதில் இடம் பெறும். இந்தப் பூங்கா மூலம் சுமார் ரூ.4,500 கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக சிப்காட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரத்தடிகள் இறக்குமதியில் தூத்துக்குடி துறைமுகம் நாட்டில் 3-வது இடத்தில் உள்ளது.

இவற்றைக் கொண்டு இங்கேயே சர்வதேச தரத்தில் பர்னிச்சர்கள் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி மற்றும் தேனி மாவட்டங்களில் கிடைக்கும் ரப்பர் மரத்தடிகள், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள யூகலிப்டஸ் மரங்கள், திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் உள்ள மலை வேம்பு, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள சில்வர் ஓக் மரங்கள் போன்ற மரங்களைப் பயன்படுத்தும் வகையிலும் இந்த பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படுகிறது.

முதல்வர் அடிக்கல்

நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல் போன்ற பணிகள் முடிவடைந்துவிட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11-ம் தேதி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழா ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

சிப்காட் பகுதியில் 1,150 ஏக்கர் நிலமும் தயார் நிலையில் உள்ளது. அதில் 500 ஏக்கர் நிலம் சுத்தப்படுத்தப்பட்டு, கட்டுமானப் பணிகளுக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் அடிக்கல் நாட்டியதும், அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் விரைவாக செய்து முடிக்கப்பட்டு சர்வதேச பர்னிச்சர் பூங்கா செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x