

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த நஞ்சப்பசத்திரம் பகுதியில்நினைவுத் தூண் அமைப்பதற்காக நில அளவீடு செய்யும் பணியை ராணுவத்தினர் தொடங்கியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இதில், பயணித்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ராணுவ கட்டுப்பாட்டில் நஞ்சப்பசத்திரம் கிராமம் கொண்டுவரப்பட்டு, விபத்துக்கு உள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதன் பின்னர், அந்தப் பகுதியில் இருந்து ராணுவத்தின் கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு தினசரி வருகை தருகின்றனர். மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேருக்கு சுற்றுலா பயணிகள் அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர்.
மேலும், மறைந்த ராணுவ வீரர்கள் 14 பேரின் நினைவாக அந்தப் பகுதியில் நினைவுத் தூண் அமைக்க வேண்டும் எனகோரிக்கை எழுந்தது. இந்நிலையில், குன்னூர் ராணுவ மையத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள், ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த இடத்தில் நேற்று ஆய்வு செய்து நிலத்தை அளவீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக ராணுவத்தினர் கூறும் போது, ‘‘ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில் நினைவுத்தூண் அமைப்பது குறித்து, சர்வேநடத்தப்பட்டது.
சர்வே பணிகள் முழுமையாக முடிந்தவுடன், உயரதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு நினைவுத் தூண் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வார்கள். பின்னர், இது குறித்து ராணுவ மேலிடத்துக்கு ஆய்வறிக்கை அனுப்பப்படும். அங்கிருந்து நினைவுத் தூண் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும். அதன் உயரம், சுற்றளவு, நினைவுத் தூணுக்கான பாதை மற்றும் வசதிகள் குறித்து வரைபடம் இறுதி செய்யப்படும். அதன் பின்னர் நினைவுத் தூண் கட்டுமானப் பணிகள் தொடங்கும். ராணுவம் சார்பில் நினைவுத் தூண் அமைக்கப்படுவதால், ராணுவபொறியியல் பிரிவு பொறியாளர்கள் கட்டுமானத்தை மேற்கொள்வர்’’ என்றனர்.