

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு, வேலை வாய்ப்புத் துறை மூலம் அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. இவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்கள் நீதிபதிகளின் வீடுகளில் வீட்டு வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதாக புகார் வருகிறது. சமீபத்தில் சத்யமங்கலம் சார்பு நீதிபதி ஒருவரது வீட்டில் பணிபுரிந்த அலுவலக உதவியாளர் மீது உள்ளாடை துவைக்க மறுக்கிறார் என்ற புகாரில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின்னர், அவர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.
உயரதிகாரிகள், பெண் அலுவலக உதவியாளர்களை கண்ணியத்துடன் நடத்தாமல், சுயகவுரவம் பாதிக்கும் வகையில் நடத்துவதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. இதுபோன்ற நடை முறையை தடுத்திட அரசாணை வெளி யிட வேண்டும். நீதிமன்ற வளாகங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சுந்தரராஜன் இரவு நேரத்தில் ஆய்வுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த மாணவிகளிடம் மிரட்டும் தோரணையில் கேள்வி கேட்டுள்ளார். அரசின் நிதி ஒதுக்கீட்டை அரசியலாக்கிப் அநாகரீக மாக பேசியுள்ளார். இதை மாதர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.