

சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான சுமை கூலியை கூடுதலாக கொடுக்க ஒப்பந்ததாரர்கள் மறுப்பதாக திமுக தொழிற்சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 7 இடங் களில் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகள் உள்ளன. இங்கிருந்து அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை பாம்கோ நிறுவனம் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு அனு ப்புகிறது. இதற்காக குறிப்பிட்ட கமிஷன் தொகை வழங்கப்படுகிறது. மேலும் லாரி கட்டணம், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான ஏற்று மற்றும் இறக்கு கூலியை நிர்ணயித்து பாம்கோ ஒப்பந்தம் மேற்கொள்கிறது. ஒப்பந்தம் எடுத்தவர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு டன்னுக்கு ரூ.100 வரை கொடுக்கின்றனர்.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு மூட்டைகளை கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்ல நிதி ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து லாரி வாட கையை பாம்கோ நிறுவனம் ஏற்றது. மேலும் சுமைத் தொழிலாளர்கள் ஒரு டன்னுக்கு ரூ.170 வரை கூலி கேட்டனர். இதனை லாரி ஒப்பந் ததாரர்கள் ஏற்க வில்லை.
அதிகாரிகள் பேச்சுவார்த் தையில் டன்னுக்கு ரூ.100 மட்டும் தர ஒப்பந்ததாரர்கள் ஒப்புக் கொண் டனர். மீதி ரூ.70-ஐ, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங் கங்கள், நுகர்பொருள் வாணிபக் கழ கங்கள், பாம்கோ நிறுவனம் ஏற்க உத்தரவிடப்பட்டது.
ஏற்கெனவே கூட்டுறவு சங் கங்கள் நலிவடைந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான கூலி, பேக் செய்தல், விநியோகத்துக்கு கூடுதல் ஆட்கள் நியமனம் என ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் ரூ.4 ஆயிரம் வரை கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இதனால் இத்தொகையை ரேஷன் கடை பணியாளர்கள் வழங்க கூட்டுறவு சங்கங்கள் வற்புறுத்துகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கை வந்த கூடுதல் பதிவாளர் சக்தி சரவணனிடம், ஏற்று மற்றும் இறக்கு கூலியை ஒப்பந் ததாரர்கள்தான் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் தர மறுப்பதாக திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் நாகராஜன், மலைச்சாமி, சரவணன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கூடுதல் பதிவாளர் உத்தரவிட்டார்.