Published : 23 Mar 2016 02:37 PM
Last Updated : 23 Mar 2016 02:37 PM

அதிமுக அணியில் மீண்டும் சரத்குமார்: ‘கட்சியை வளர்ப்பதற்கு’ என விளக்கம்

அதிமுகவுடன் உறவை முறித்துக் கொண்ட சமக, தற்போது மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்தது. கட்சியை வளர்க்கவே இந்த முடிவு எடுத்ததாக அதன் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ல் அதிமுக கூட்டணியில் இருந்த நடிகர் ஆர்.சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, இரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. சரத்குமாரும் எர்ணாவூர் நாராயணனும் வெற்றி பெற்று எம்எல்ஏவாகினர்.

தொடர்ந்து அதிமுகவுடன் சமக நட்பு பாராட்டி வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் அதிமுக தலைமைக்கும், சரத்குமாருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பால் கூட்டணியை விட்டு விலகினார்.

அதேநேரம் சமகவில் இருந்து விலகிய எர்ணாவூர் நாராயணன் புதிய கட்சி தொடங்கி ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால் அதிமுக வுடன் இனி கூட்டணியே கிடையாது என விமர்சித்து வந்த சரத்குமார் பாஜக பக்கம் சென்றார்.

இதற்கிடையில், நேற்று மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் இணைந்த பரபரப்பு அடங்குவதற்குள், திடீரென போயஸ் கார்டன் வந்த சரத்குமார் ஜெயலலிதாவை சந்தித்து 30 நிமிடம் பேசினார். அப்போது, அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இருந்தனர்.

பின்னர் நிருபர்களை சந்தித்த சரத்குமார், ‘‘மகிழ்ச்சிகரமான சந்திப்பு. அதிமுகவுக்கு சமக வின் முழு ஆதரவை தெரி வித்துள்ளோம். இது திடீர் சந்திப்பல்ல. ஏற்கனவே இந்த கூட்டணியில்தான் இருந்தோம். சில காரணங்களுக்காக, குறிப் பாக நாங்கள் எங்கள் கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கட்சியை வளர்க்க இப்படிப்பட்ட முடிவுதான் சிறப்பாக இருக்கும். நாங்கள் எங்கள் ஆதரவை தெரிவித்தோம். அதை மகிழ்ச்சியுடன் முதல்வர் ஏற்றுக் கொண்டார்.

கருத்து கூற விரும்பவில்லை

மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுவோம். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது குறித்து விரைவில் அறிவிப்போம்” என்று கூறினார். எர்ணாவூர் நாராயணன் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x