Published : 06 Jan 2022 09:00 AM
Last Updated : 06 Jan 2022 09:00 AM

நில அதிர்வு குறித்த முழு காரணம் 45 நாட்கள் ஆய்வு செய்த பிறகே தெரியவரும்: வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகவல்

வேலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பாக முழு விவரம் 45 நாட்களுக்கு பிறகு தெரியவரும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு, தரைக்காடு, மீனூர் உள்ளிட்ட பகுதிகளிலும், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நவம்பர் 29-ம் தேதியும், டிசம்பர் மாதம் 3-ம் தேதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. பூமிக்கடியில் மிகுந்த சத்தம் ஏற்பட்டதாகவும் பல இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக வீடுகளில் வசிக்க தயங்கிய பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதைத்தொடர்ந்து, பேரணாம்பட்டு பகுதியில் முகாம் அமைக்கப்பட்டு அங்கு பொதுமக்கள் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டனர்.

நில அதிர்வு ஏற்பட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண் டார். இதைத்தொடர்ந்து, மத்திய ஆய்வுக்குழுவினரும் பேர ணாம்பட்டு, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரங்களில் ஆய்வு நடத்தினர்.

இந்நிலையில், புவியியல் வல்லுநர்கள் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக நில அதிர்வு ஏற்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் தொடர்ச்சி யாக வேலூர் மாவட்டம் கழனிப்பாக்கம்,பேரணாம்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி, ஆந்திர மாநிலம் வி-கோட்டா, பலமநேரி ஆகிய இடங்களில் நில அதிர்வு கணக் கிடும் சிஸ்மோகிராப் கருவி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட கழனிப்பாக்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நில அதிர்வு கண்டறியும் சிஸ்மோகிராப் கருவியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் சென்னை புவியியல் ஆய்வு மையத்தின் புவியியல் வல்லுநர்கள் சிவகுமார், ஓ.பி.சிங் ஆகியோருடன் நேரில் சென்று நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளிலும், மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள ஆந்திரா மற்றும் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில்

லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், பெரும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாவிட்டாலும் பொது மக்கள் நலன் கருதி இங்கு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

இந்நிலையில் நில அதிர்வு குறித்து ஆய்வு செய்ய புவியியல் ஆய்வு வல்லுநர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். தற்போது 5 இடங்களில் நில அதிர்வு கண்காணிக்கும் சிஸ்மோகிராப் கருவிகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 45 நாட்களுக்கு ஆய்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கு பிறகே நில அதிர்வு ஏற்பட்டதற்கான முழுமையாக காரணம் என்ன என்பது அறிய முடியும்.நில நடுக்கத்தால் மட்டுமல்லாமல் பல்வேறு காரணங் களாலும் நில அதிர்வு ஏற்படும் என்பதால் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்கள் நில அதிர்வு குறித்து அச்சப்பட தேவையில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x