Published : 06 Jan 2022 09:07 AM
Last Updated : 06 Jan 2022 09:07 AM

அரக்கோணம் அருகே 14 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான்: ஆரணியில் 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று

அரக்கோணம்/ஆரணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் தொற்று மற்றும் 63 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. இதேபோல் ஆரணியில் 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி முதல் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 63 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், அரக்கோணம் அடுத்த பாரஞ்சி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த சிறுவன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

மேலும், அச்சிறுவனின் குடும் பத்தைச் சேர்ந்த 8 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. இது மட்டுமின்றி அரக்கோணம் ராஜாளி கடற்படை வீரர்கள் 15 பேர், காவல் துறையினர் 8 பேர், மத்திய பாதுகாப்பு படையினர் 16 பேர், பொதுமக்கள் என அரக்கோணத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 40 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். வெளியே வரும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப்போட்டு கழுவ வேண்டும். இருப்பிடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

தடுப்பூசியால் மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதால், தகுதியுள்ள அனைவரும் தவறாமல் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும், அரசின் உத்தரவுகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க நேரிடும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளார்.

ஆரணியில் பள்ளிக்கு விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் சுப்பிரமணிய சாஸ்திரியார் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி யாற்றி வருகின்றனர். இங்கு அரசு உத்தரவின்படி 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த பள்ளியில் படிக்கும் சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் நேற்று முன்தினம் சேகரிக்கப்பட்டன. இதன் முடிவுகள் நேற்று வெளியானதில் 9-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மேலும், பள்ளியில் நகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து பள்ளியை பூட்டப்பட்டது.

இது தொடர்பாக தி.மலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக தரப்பில் விசாரித்தபோது, ‘‘மாணவர்களுக்கு தொற்று உறுதியான தகவலை அடுத்து ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளிக்கு 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார துறையினர் கூறும் அறிவுரைகளை பின்பற்றவும், கல்வி மாவட்ட அலுவலர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x