Published : 05 Jan 2022 07:33 PM
Last Updated : 05 Jan 2022 07:33 PM

நீட் விவகாரத்தில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவின் அணுகுமுறை கண்டனத்துக்குரியது: இரா.முத்தரசன்

சென்னை: நீட் விவகாரத்தில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவின் அணுகுமுறைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு ‘நீட்” தேர்வை அறிமுகப்படுத்திய, ஆரம்ப நிலையில் இருந்தே தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் கோரிக்கை மீது முடிவு எடுத்து “நீட்” தேர்வுக்கு விலக்கு அளிக்க முன்வராமல் காலதாமதப்படுத்தி, நடைமுறையில் நெட்டித் தள்ளி அமலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை சந்திக்க சென்றபோது, கரோனா நோய்த் தொற்று தடுப்புக்கான கட்டுப்பாடுகளை காரணமாக்கி குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களை சந்திக்கவில்லை. அவரது அலுவலக அதிகாரிகளிடம் விண்ணப்பம் கொடுத்து திரும்பினர்.

இந்த நிலையில் ஒன்றிய அரசின் உன்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திமுகழக நாடாளுமன்றக் கட்சி தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில், கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்றக்குழு தலைவர்கள் கடந்த 02.01.2022 முதல் 05.01.2022 முடிய நான்கு நாட்கள் டெல்லியில் காத்திருத்தும் உள்துறை அமைச்சர் சந்திக்க முன்வரவில்லை.

பாஜகவின் இந்த அணுகுமுறை தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானது. நீட் விவகாரத்தில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவின் அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க முன்னுரிமை அளிக்காதது, நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் செயலாகும். மத்திய அரசின் உள்துறை அமைச்சரின் எதிர்மறை அணுகுமுறையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

“நீட்” தேர்வுக்கு விதிவிலக்கு பெறவதற்கான முறையில் மக்கள் உணர்வுகளை அணி திரட்டி, மத்திய அரசுக்கு வலுவான அழுத்தம் தர தயாராக வேண்டும் என அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x