

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் திருமஞ்சன கோபுர விதானத்தில் பாதி அழிந்த நிலையில் 400 ஆண்டுகள் பழமையான சேவப்ப நாயக்கர் காலத்து முருகன் ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தெற்கு பகுதியில் உள்ள திருமஞ்சன கோபுரத்தின் விதானத்தில் பாதி அழிந்த நிலையில் ஓர் ஓவியம் இருப்பது தெரியவந்துள்ளது.இது குறித்து, திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் சதர்சன், உதயராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர். அதில், அண்ணாமலையார் கோயிலில் ராஜகோபுரம், புரவி மண்டபம், கல்யாண மண்டபம் மற்றும் மேற்கு திருமால் பத்தியில் உள்ள ஓவியங்கள் ஆவணம் செய்யப்பட்டிருப்பதும் திருமஞ்சன கோபுர விதானத்தில் உள்ள ஓவியம் ஆவணம் செய்யப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
மயில் மீது முருகன் ஓவியம்: இந்த ஓவியம் முருகன் மயில் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து சதுர்புஜத்துடன் காட்சிதர அவரது வலதுபுறத்தில் வள்ளியும், இடதுபுறத்தில் தெய்வானையும் காட்சி தருகின்றனர். முருகனின் தலையை அழகான கிரீடம் அலங்கரிக்க காதில் குண்டலங்களும் கழுத்தில் கண்டிகையும், சரப்பளி அணிந்து, மார்பின் மீது ஸ்தன சூத்திரம், முப்புரிநூல், உரஸ் சூத்திரம் அணிந்து மார்பின் கீழ் உதரபந்தத்துடன் காட்சி தருகிறார்.
முருகனின் வலது மேற்கரம் வஜ்ராயுதம் ஏந்தியும், கீழ் கரம் அருள்பாலிக்கும் அபய முத்திரையும், இடது மேற்கரம் சக்தி குலிசம் ஏந்தியும் கீழ் இடக்கரம் வரத முத்திரையுடன் காட்சியளிக்கிறார். அனைத்து கைகளிலும் தோள் வளை மற்றும் கைவளைகள் அணிந்து இருபக்க தோள்களில் மாலையுடன் காட்சியளிக்கிறார்.
முருகன் தனது வாகனமான மயில் மீது இடது காலை மடக்கியும், வலது காலை தொங்கவிட்டபடி உத்குடிகாசனத்தில் அமர்ந்து ‘சிகிவாகனராக நீள்வட்ட பிரபையினுள் காட்சியளிக்கிறார். கந்த புராணம் கூறும் 16 கோலங்களில் ஒன்றான சிகிவாகனர் கோலத்தில் இந்த ஓவியம் உள்ளது குறிப்பிடத்தக்கது. முருகனுடன் உள்ள வள்ளி, தெய்வானை ஓவியங்கள் சேதமுற்று இருக்கிறது. தெய்வானையின் அருகில் சேடிப்பெண் ஒருவர் அக்காலத்து உடை மற்றும் கொண்டை அணிந்து சாமரம் வீசும் காட்சியுடன் உள்ளது. அதேபோல், வள்ளியின் அருகில் சாமரம் வீசும் சேடிப்பெண்ணின் ஓவியம் சேதமடைந்துள்ளது.
சேவப்ப நாயக்கர் காலம்: இந்த ஓவியம் சுண்ணாம்பு, கருப்பு மை, உலோக வண்ணங்களான சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய 5 வர்ணங்களையும் சேர்த்து பஞ்சவர்ண ஓவியமாக தீட்டியுள்ளனர். இந்த ஓவியத்தில் தீட்டப்பட்டுள்ள வர்ணங்கள், காட்டப்பட்டுள்ள ஆபரணங்கள் அனைத்தும் தஞ்சை பெரிய கோயிலின் நாயக்கர் கால ஓவியத்துடன் ஒத்துப்போவதுடன் ஆந்திர மாநிலம் லீபாக்ஷி வீரபத்திரர் கோயிலில் உள்ள ஓவியத்துடன் ஒத்துப்போவதால் இதனை நாயக்கர் கால ஓவியமாக கருதலாம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் ராஜகோபுர திருப்பணி மற்றும் மதில்கள் தஞ்சை நாயக்க மன்னரான சேவப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டவை. எனவே, இந்த ஓவியத்தை 16-ஆம் நூற்றாண்டின் கடைசி பகுதியான சேவப்ப நாயக்கர் காலத்தை ஒட்டியதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த ஓவியத்தை சிதைவில் இருந்து தமிழக தொல்லியல் துறையும் இந்து சமய அறநிலையத்துறையும் முறையாக ஆவணம் செய்து பாதுகாக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் கோரிக்கை வைத்துள்ளனர்.