Published : 05 Jan 2022 06:26 PM
Last Updated : 05 Jan 2022 06:26 PM

பொங்கலுக்கு ரொக்கம் பெற்ற மக்களின் எதிர்பார்ப்பை ஆளுநர் உரை கருத்தில் கொள்ளவில்லை: இந்திய கம்யூ.

பொங்கலுக்கு ரொக்கப் பண உதவி பெற்ற மக்களின் எதிர்பார்ப்பை ஆளுநர் உரை கருத்தில் கொள்ளவில்லை என்றும், தொழிலாளர் நலன், பணியாளர் நலன், பழைய ஓய்வூதியத் திட்டம் போன்றவை குறித்து ஒரு வார்த்தையும் ஆளுநர் கூறாதது வியப்பளிக்கிறது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றத்தின் பதினாறாவது கூட்டத் தொடரை இன்று (05.01.2022) ஆளுநர் தொடக்கி வைத்து உரை ஆற்றியுள்ளார். ஆளுநர் உரை அரசின் கொள்கை நிலையினையும், பிரச்சினை அணுகும் முறை குறித்தும் தெளிவுபடுத்தும் மரபு வழி நிகழ்வாகும்.

ஆளுநர் சட்டப் பேரவையில் ஆற்றி உரை கடந்த எட்டு மாதங்களாக அரசு எடுத்து வந்த நடவடிக்கைகளை மிக சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளது. குறிப்பாக கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கை விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் 40 சதவீதம் மக்களுக்கு இன்னும் இரண்டாம் தவணை தடுப்பு ஊசி செலுத்த வேண்டும் என்பதை கருதி பார்க்க வேண்டும். இப்போது ஒமைக்ரான் நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.

வடகிழக்கு பருவ மழை இயல்பு நிலைக்கும் மிக அதிகமாக தொடர் கன மழை பெய்தது. இதனால் பெருவெள்ளம் ஏற்பட்டு சென்னை பெருநகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், காவிரி பாசன மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேட்டு நிலச் சாகுபடி செய்த விவசாயிகளும் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளனர். இந்த இயற்கைப் பேரிடர் காலங்களில் முதல்வர் சலிப்பறியாது பயணம் செய்து, இரவும், பகலுமாக பாதிக்கப்பட்ட மக்களை அரவணைத்து ஆறுதல் கூறியது இதுவரை தமிழ்நாடு கண்டறியாத சாதனையாகும். வடக்கு கிழக்கு பருவமழையின் தீவிரத் தாக்குதலில் காவிரி பாசன மாவட்டங்களில் விளைந்து, அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிரை விவசாயிகள் இழந்து விட்டனர்.

இதே காலகட்டத்தில் தாளடி பயிர் நடவு செய்திருந்த விவசாயிகளின் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்களின் வேர்கள் அழுகி முற்றிலுமாக சேதமடைந்து விட்டன. மேட்டு நில சாகுபடி சேதாரத்தால் காய்கறி விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்ந்து விட்டதை அரசு அறிந்திருக்கும். அண்மையில் தென்னக வானிலை மையத்தையும், அரசின் கவனத்தையும் ஏமாற்றி பெய்த பெருமழையால் விளைந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, சேரும் சகதியுமான நிலத்தில் விழுந்து அழுகி போயுள்ளது. இந்தக் கடுமையான பாதிப்பை சந்தித்த விவசாயிகள் கூடுதல் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். இது பற்றி ஆளுநர் உரை எதுவும் குறிப்பிடவில்லை.

குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டம் மகிழ்ச்சி அளிப்பதுதான். ஆனால் பொங்கலுக்கு ரொக்கப் பண உதவி பெற்ற மக்களின் எதிர்பார்ப்பை ஆளுநர் உரை கருத்தில் கொள்ளவில்லை. நீழ் வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுவது சரிதான். ஆனால் பல ஆண்டுகளாக அங்கு குடியிருந்து வந்தவர்களின் மறுகுடியமர்வு - மறு வாழ்வு அளிப்பது குறித்து ஆளுநர் உரையில் எதுவும் இடம் பெறவில்லை.

தமிழ்நாட்டில் புதிய முதலீட்டுக்கு முன்னுரிமை கொடுத்து, 109 பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருப்பது வரவேற்கதக்கது. ஆனால் தொழிலாளர் நலன், பணியாளர் நலன், பழைய ஓய்வூதியத் திட்டம் போன்றவை குறித்து ஒரு வார்த்தையும் ஆளுநர் கூறாதது வியப்பளிக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றும்போது முதல்வர் ஆற்றும் உரையில் இடம்பெறும் என நம்பிக்கையோடு எதிர்பார்த்து, மரபு வழி ஆளுநர் உரையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x