Published : 05 Jan 2022 04:02 PM
Last Updated : 05 Jan 2022 04:02 PM

'தேர்தலுக்காகவே அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகை வழங்கினீர்கள்' - ஈபிஎஸ்ஸுக்கு தங்கம் தென்னரசு பதிலடி

அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தபோது.

சென்னை: "எதிரே தேர்தலை வைத்துக்கொண்டுதான் அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் உரை தொடங்கியபோது சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, பொங்கல் பரிசுத் தொகை வழங்காதது, அம்மா மினி க்ளினிக்குகள் மூடல் உள்ளிட்ட காரணங்களைக் கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பின்னர், சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தியாளர்களிடம் கூறும்போது, "இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மக்களுக்கு தேவையான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அரசுப் பள்ளிகளில் மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு ஊக்கத்தினை அளிக்கும் திட்டங்கள் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய அதிமுக இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். ஜனநாயக முறைப்படி அவர்கள் வெளிநடப்பு செய்ததில் தவறில்லை. ஆனால், வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்துள்ள பழனிச்சாமி பொய்யுரைகளின் முழுத் தொகுப்புரையாக தன்னுடைய கருத்துக்களை இந்த ஆட்சியின்மீது அவிழ்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

குட்கா யாருடைய ஆட்சியில் அறிமுகம்? - எடப்பாடி செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 6 மாதத்தில் குட்கா, கஞ்சா போன்றவற்றின் நடமாட்டம் அதிகரித்துவிட்டதாக கூறியுள்ளார். ஆனால் குட்கா என்ற போதைப்பொருள் இருந்ததே மக்களுக்கு தெரியவந்தது எடப்பாடி தலைமையில் நடந்த கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில்தான். போதைப்பொருள் நாடுமுழுவதும் பரவி போதைப்பொருள் மலிந்த ஆட்சியாக எடப்பாடி ஆட்சி இருந்தது. போதைப்பொருளைப் பற்றி பேசுவதற்கு எடப்பாடிக்கோ, அவருடன் இன்றிருக்கக் கூடிய அதிமுகவின் இணைத் தலைமைக்கு எந்தவிதத்தில் அருகதை இருக்கிறது?

பொள்ளாட்சி பாலியல் வன்முறை: அதேபோல பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லாம் இந்த ஆட்சியில் பெருகிவிட்டதாக சொல்கிறார். பொள்ளாச்சியில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்களே எத்தனையோ இளம் குழந்தைகள், சிறு குழந்தைகள் கதறி அழுதார்களே, அதெல்லாம் யார் ஆட்சி காலத்தில் நடந்தது என்பதை எடப்பாடி மறந்துவிட்டாரா? அதற்கெல்லாம் தீர்வுகாணப்பட்டது திமுக ஆட்சியில் என்பதை எடப்பாடி மறுக்கப் பார்கிறாரா? கதறக் கதற பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டவர்களின் மீது அவர்கள் ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றால் ஒன்றுமில்லை. அன்றைக்கு அந்த வன்முறையில் யார்யாரெல்லாம் ஈடுபட்டார்களோ அவர்களையெல்லாம் இன்றைக்கு மிகப்பெரிய பொறுப்புகளில் கொண்டுவர காத்தார்கள் என்பதை நாட்டுமக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு யாருடைய ஆட்சியில்: அடுத்ததாக இன்னொன்றைக் கூறுகிறார்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, துப்பாக்கி கலாச்சாரம் வந்துவிட்டது என்று. துப்பாக்கிக் கலாச்சாரம் யாருடைய ஆட்சியில் வந்தது? திமுக ஆட்சியில் அப்பாவி மக்கள் யாரையாவது சுட்டுக்கொன்றிருக்கிறோமா? ஆனால் இதே ஸ்டெர்லைட் பிரச்சினை வரும்போது அப்பாவி மக்கள் 13 பேரை, நிறுத்திவைத்து ஒவ்வொருவராக குறிபார்த்து சுட்டுவீழ்த்திய ஆட்சி, துப்பாக்கிக் கலாச்சாரத்தை தூக்கிப்பிடித்த ஆட்சி, சட்டம் ஒழுங்கை முற்றிலுமாக சீர்குலைத்து அந்த காவல்படைக்கு இருக்கக்கூடிய கவுரவத்தை குலைத்த ஆட்சி யாருடைய ஆட்சி என்று கேட்டால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி. டிஜிபி என்று பதவிக்கு மேல் ஸ்பெஷல் டிஜிபி என்று பதவியை நியமித்து டிஜிபியை இயங்கவிடாமல் செய்த ஆட்சி எடப்பாடி ஆட்சி.

ஸ்பெஷல் டிஜிபி மேலேயே பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு அவர் இன்றைக்கு ஒவ்வொரு நீதிமன்றமாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார் என்றால், எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி எந்த அளவுக்கு இருந்தது, அவர்கள் இன்றை பாலியல் வன்முறையை, சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசுவதற்கு எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேசுகிறார்கள்? நான் கேட்க விரும்புகிறேன்.

மழைவெள்ளத்தில் கள ஆய்வில் ஈடுபட்டவர் ஸ்டாலின்: மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் கொடுக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள். இன்றைக்கு நிவாரணங்கள் முழுமையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிவாரணங்கள் கொடுப்பதற்கான சரியான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நிவாரண இழப்பீடுகள் பெறுவதற்கான அரசாணை இன்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதிமுகவினரின் கூட்டணிக் கட்சியான பாஜகவின் மத்திய அரசில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மையிடம் தமிழக தேவையான நிவாரணம் கேட்டுப்பெறுவதை விட்டுட்டு அரசியல் செய்துகொண்டிருப்பதை கடுமையாக கண்டிக்கக் கூடியதாகும்.

மழை, வெள்ளத்தைப் பற்றி பேசுகிறார் எடப்பாடி. இவர் மழை வெள்ளத்தின்போது எந்த இடத்திற்கு சென்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் சென்று பார்த்தார். திடீரென்று அன்றைக்கு சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டபோது திருச்சி மாநகரத்தில் இருந்த முதல்வர் உடனடியாக திரும்பிவந்து அவர்களைப்போல வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்துக்கொள்ளாமல் நேரடியாக களத்திற்கு வந்தார். இரவு ஒரு மணிவரை களத்தில் இருந்தார். அந்தப் பகுதிகளை பார்வையிட்டு அதற்கான நிவாரணங்களை வழங்க உத்தரவிட்டார். இன்னும் சொல்லப்போனால் மழை வெள்ளம் வடிந்த பிறகும்கூட மீண்டும் அவ்விடங்களுக்கு சென்று மழை மீண்டும் வந்தால் அங்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாத வண்ணம் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்என்பதை முதல்வர் அறிவுறுத்தினார். மழை, வெள்ளம் வடிந்தபிறகும் அந்த இடங்களுக்கு சென்று பார்வையிட்ட ஒரே முதல்வர் நமது முதல்வர்தான்.

தேர்தலுக்காக பொங்கல் பரிசு: பொங்கலுக்காக பணம் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். நீங்கள் எதற்காக பொங்கலுக்காக பணம் கொடுத்தீர்கள்? அதற்குமுன்பு 5 கால ஆட்சியில் பொங்கலுக்குப் பணம் தரவில்லையே? போனவருடம் தேர்தல் வரப்போகிறது என்பதற்காக பொங்கலுக்கு பணம் கொடுத்தீர்கள். ஆனால் இந்த ஆட்சி அப்படி அல்ல, ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால், கரோனா நிவாரணத் தொகையாக ரூ.4000 வழங்குவதாக சொன்னோம். ரூ.4000 கரோனா நிவாரணத் தொகையை நாங்கள் முழுமையாக வழங்கி இருக்கிறோம். சொன்னதை செய்திருக்கிறோம். இப்போது கூட பொங்கலுக்கு தரமான பொருட்களை முழுமையாக வழங்கியிருக்கிறோம். அதேபோல கரும்புயும் வழங்கியிருக்கிறோம். இவற்றையெல்லாம் அவர்களாலே பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

மருத்துவர்கள் இல்லாத அம்மா மினி கிளினிக்குகள்: அம்மா மினி கிளினிக்குகளைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். இந்த ஆட்சி நிச்சயம் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஆட்சியில்லை. அம்மா மினி கிளினிக்குகள் என்று ஆரம்பித்துவிட்டு அங்கே டாக்டரையும் நியமிக்கவில்லை, செவிலியர்களையும் நியமிக்கவில்லை. பேருக்காக வைத்துவிட்டு அந்தக் கட்டித்திற்கு வாடகையும் தராமல்தான் சென்றுள்ளீர்கள். டாக்டரும் இல்லாமல் செவிலியர்களும் இல்லாமல் பேருக்காக ஆரம்பித்த அந்த கிளினிக்குகளை விட இங்கே ஏற்கெனவே இருக்கக்கூடிய மருத்துவக் கட்டமைப்புகளை சிறப்பாக செயல்படுத்தவே விரும்புகிறோம். ஏற்கெனவே ஆட்சிக்கு வந்த உடனேயே கரோனா 2-வது அலையைக் கட்டுப்படுத்தினோம். தற்போது 3வது அலை வருவதற்கு முன்னரே மிகப்பெரிய அளவிலே தடுப்பூசிகளை செலுத்தி முடித்திருக்கிறோம். பொது சுகாதாரத்துறையில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதல்வர் ஒவ்வொரு நாளும் அவரே ஆய்வுப் பணிகளை மேற்கொணடு வருகிறார். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த அரசு இயங்குகிறது என்றால் அம்மா கிளினிக்குகள் மூடப்பட்டன என்றால் ஏன் அம்மா உணவகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை பார்க்கவேண்டும். மருத்துவத்துவர்களோ செவிலியர்களோ நியமிக்கப்படாததால்தான் அம்மா கிளினிக்குகள் மூடப்படுகின்றன.

நகைக்கடன்களில் மோசடி: நகைக்கடன் குறித்து சொன்னார்கள். இவர்கள் ஆட்சியில் யார் யாருக்கெல்லாம் நகைக்கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தால் உதாரணமாக திருவண்ணாமலையில் ஒரே ஒருவர் 62 பேரின் பெயர்களில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு கடன் தலா 10 பவுன் அளவில் வைத்து வாங்கியிருக்கிறார். இந்த மோசடிகளுக்கு யார் துணை போயிருக்கிறாகள். யாருடைய ஆட்சியில் நடந்திருக்கிறது. எனவே அவற்றையெல்லாம் எடுத்து சரிபார்த்து, யாரெல்லாம் தவறு செய்திருக்கிறார்களோ, யாரெல்லாம் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்களோ? யாரெல்லாம் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார்களோ அதையெல்லாம் சரிபார்த்து களைந்து, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து கூட்டுறவுத்துறைஅமைச்சர் அவர்களும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சட்டப்பேரவையை கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடியின் பேட்டி பொய்ப்புரையின் தொகுப்பு. புறந்தள்ளப்பட வேண்டிய ஒன்று. முதல்வரின் நல்லாட்சி குறித்து நாடும் ஏடும் பாராட்டுகிறது. நாட்டு மக்கள் பாராட்டுகிறார்கள். இவர்கள் சொல்வதை நாட்டுமக்கள் நம்பப் போவதில்லை. இவர்களின் பேச்சைக் கண்டு மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்" என்று தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x