தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

மா.சுப்பிரமணியன் | கோப்புப் படம்
மா.சுப்பிரமணியன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் அன்றாட கரோனா பாதிப்பு நேற்று (ஜன.4) மாலை நிலவரப்படி 2731 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்திலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவ அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அதிகரித்துவரும் கரோனாவைக் கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு என்பதால் வாரந்தோறும் சனிக்கிழமையன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

கடந்த இரண்டு வாரங்களாக ஒரு சனிக்கிழமை கிறிஸ்துமஸாகவும், அடுத்த சனிக்கிழமை புத்தாண்டு ஆகவும் வந்ததால் தடுப்பூசி போடுவதை அந்த வாரங்களில் ஞாயிற்றுக்கிழம என மாற்றினோம். இனி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.

பள்ளிகளைப் பொறுத்தவரை பள்ளி மாணவர்களுக்கு 33,60,000 பேருக்கு தடுப்பூசி போடவேண்டியுள்ளது. முதல்நாள் முதல்வர் தொடங்கிவைத்த உடனே 3 லட்சத்துக்கும் மேலே தடுப்பூசி போடப்பட்டது. நேற்று 5 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அநேகமாக இந்த 10 நாட்களில் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் பணி நிறைவு பெறும் பொறியியல் கல்லூரிகளில் 4 லட்சம் மாணவர்கள் இருக்கிறார்கள்.ஏற்கெனவே 44 சதவீதம் போடப்பட்டிருந்த நிலையில் இந்த வாரம் சிறப்பு முன்னெடுப்புப் பணிகளால் 57 சதவீதமாக உயர்ந்தது. இனிவரும் இப்பணிகளும் முழுமையடையும்.

பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான அறிவிப்புகள் அடுத்து வெளியாகும்.

இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in