Published : 05 Jan 2022 03:01 PM
Last Updated : 05 Jan 2022 03:01 PM

"நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் தேவையற்றவை" - மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவதாக ஆளுநர் உரையில் தகவல்

"நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் தேவையற்றவை என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டம் என்பதால், முதன் முதலாக அவர் உரையாற்றினார். அவர் தனது உரையில் நீட் தேர்வு, கல்வி இடஒதுக்கீடு குறித்து கூறும்போது, "ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவுகளைச் சார்ந்த மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை உயர்த்துதல், புதிய விடுதிகளுக்கு ஒப்புதல் அளித்தல், புதிய பயிற்சித் திட்டங்களைத் தொடங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்துள்ளது.



முதல்வரின் இடையறா முயற்சியின் பயனாக இளநிலை மற்றும் நிறைநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய அளவிலான இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு சாத்தியமானது. இதுபோன்ற அனைத்து தொழிற்படிப்புகளிலும் அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும். இவ்வாறு நீதிக்கட்சியின் காலத்திலிருந்தே சமூக நீதிக் கருத்துகளை முன்வைத்து மானுடம் வெல்லும் பாதையில் மற்ற மாநிலங்களை வழி நடத்திச் செல்லும் தமிழ்நாட்டின் வரலாற்றுப் பொறுப்பை இந்த அரசு நிறைவேற்றும்.

பொதுவாக, நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமனற்ற தளத்தையும், பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. எனவே, தொழிற்படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கைக்கு நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றவை என்ற இந்த அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம். கல்வி நிறுவனங்களின் அருகில் போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று ஆளுநர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x