

சென்னை: நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று தொடங்கியது.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின் நடைபெறும் பேரவைக்கூட்டம் என்பதால், முதன் முதலாக அவர் உரையாற்றி வருகிறார். தனது உரையில் ஆளுநர், முதல்வர் ஸ்டாலின் கரோனா இரண்டாம் அலையின்போது சிறப்பாகச் செயல்பட்டு மாநிலத்தில் தொற்றின் வீரியத்தைக் கட்டுப்படுத்தியதாகப் பாராட்டினார்.
இந்த நிலையில் ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சட்டப் பேரவையிலிருந்து அதிமுக, விசிக கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
விசிக வெளி நடப்பு செய்தற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆளுநரின் தமிழக விரோதப் போக்கைக் கண்டித்து இன்று ஆளுநர் உரையின் போது விசிக வெளிநடப்பு செய்தனர்.
நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல் என கண்டித்து வெளிநடப்பு செய்தனர்” என்று பதிவிட்டுள்ளார்.