

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட சாத்தூர் அருகே இன்று (புதன்கிழமை) காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஆலை உரிமையாளர் உள்பட மூவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு கருப்பசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இருக்கின்றது. இங்கு இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு வெடி மருந்தில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் இருந்த இரண்டு அறைகள் இடிந்து தரைமட்டமாகின. விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக ஆலைக்குச் சென்றனர்.
கட்டிட இடிபாடுகளில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டு சிவகாசி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஆலை உரிமையாளர் கருப்பசாமி, ஊழியர் செந்தில்குமார் உள்ளிட்ட மூவர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். சிகிச்சையில் நால்வர் உள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர், வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். ஆட்சியர் மேகநாத் ரெட்டி சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தார்.
சிவகாசி பட்டாசு ஆலைகள் நாக்பூர் உரிமம், சென்னை உரிமர், ஆர்டிஓ உரிமம் ஆகியனவற்றின் அடிப்படையில் உரிமம் பெற்று இயங்குகின்றன. இதில் விபத்துக்குள்ளான சாத்தூர் ஆலை, ஆர்டிஓ உரிமம் பெற்று இயங்கிவந்துள்ளது. ஆனால், உரிமம் புதுப்பிக்கப்பட்டதா, முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா என்பன குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஜனவரி 1 விபத்து: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே களத்தூர் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஜனவரி 1 ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் இன்று இன்னொரு விபத்து ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.