Published : 05 Jan 2022 07:26 AM
Last Updated : 05 Jan 2022 07:26 AM

சான்றிதழ்கள் வழங்கி பணம் சம்பாதிக்கும் நோக்கிலேயே - நிகர்நிலைப் பல்கலை.கள் செயல்படுகின்றன: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

சென்னை: சான்றிதழ்கள் வழங்கி பணம் சம்பாதிக்கும் நோக்கிலேயே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், கல்விக்கும், தகுதிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.

மின்வாரியத்திடம் கோரிக்கை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்பகிர்மானக் கழகத்தில் டிப்ளமோமுடித்து இளநிலைப் பொறியாளராக பணியாற்றும் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர், தாங்கள் பிஇ மெக்கானிக்கல் படிப்பை முடித்து விட்டதால் உதவிப் பொறியாளர் பணியிடத்தில் தங்களை நியமிக்க வேண்டுமென மின்வாரியத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையம்மூலமாக பிஇ பட்டம் பெற்றுள்ளதால் அது செல்லுபடியாகுமா என மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளதாகக் கூறி டான்ஜெட்கோ தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொலைதூரக் கல்வி மையம் மூலமாக பட்டம் பெற்றவர்கள் அகில இந்திய தொழி்ல்நுட்பக் கல்விக் குழுமம் நடத்தும் தேர்வுகளி்ல் தேர்ச்சி பெற வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் நடத்தும் தேர்வில் தேர்ச்சிபெற்ற தங்களுக்கு உதவிப் பொறியாளராக பதவி உயர்வு வழங்ககோரி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உதவி்ப் பொறியாளர் பணியிடங்கள் காலியாகும்போது தொலைதூரக் கல்வி மையம் மூலமாக பிஇ பட்டம் பெற்றவர்களையும் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

நீதிமன்றத்தில் மேல்முறையீடு

அதன்படி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தங்களுக்கு உதவிப் பொறியாளர் பணி வழங்கக் கோரி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உதவி பொறியாளர் பணியிடங்கள் காலியாகும்போது தொலைதூரக் கல்வியில் பிஇ பட்டம் பெற்றவர்களையும் பரிசீலிக்க வேண்டுமென ஏற் கெனவே உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்றத்தின் இந்தஉத்தரவை எதிர்த்து மின்வாரியத்தில் இளநிலைப் பொறியாளராக பணியாற்றும் ஆனந்த்குமார் உள்ளிட்ட 14 பொறியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.வைத்யநாதன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில்,“நாங்கள் நேரடியாக பொறியியல் படிப்பை முடித்து மின்வாரியத்தில் பணிக்கு சேர்ந்துள்ளோம். தனி நீதிபதியின் உத்தரவுப்படி தொலைதூரக் கல்வி மூலமாக பிஇ முடித்தவர்களை உதவிப் பொறியாளராக நியமித்தால் எங்களது பணி மூப்பு பாதிக்கும்” என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 2009-ம் ஆண்டுக்குள் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே உதவிப் பொறியாளராக பதவி உயர்வு வழங்க இயலும். ஆனால் 2018-ம் ஆண்டு இந்ததேர்வில் வெற்றி பெற்ற இளநிலைப் பொறியாளர்களுக்கு உதவிப் பொறியாளராக பதவி உயர்வு வழங்க இயலாது என்பதால் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவி்ட்டுள்ளனர்.

மேலும் தங்களது உத்தரவில்,விநாயகா மிஷன் உள்ளிட்ட நிகர்நிலைப் பல்கலைகழகங்களுக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சான்றிதழ்கள் வழங்கி, பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும், கல்விக்கும், தகுதிக்கும் உள்ள வித்தியாசத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உணர வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

கல்விக்கும், தகுதிக்கும் உள்ள வித்தியாசத்தை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் உணர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x