

மதுரை: மதுரையில் ஜன.12-ல் பிரதமர் மோடி பங்கேற்கும் பொங்கல் விழாவை கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பாஜக சார்பில் ஜன.7 முதல் 12-ம் தேதி வரை 1,100 இடங்களில் 'நம்ம ஊரு பொங்கல்' கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதன் நிறைவு விழா மதுரையில் ஜன. 12-ல் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை, விருதுநகரில் ஜன.12-ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மதுரை மண்டேலா நகரில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடந்த இடத்தில் மாலை 5 மணி அளவில் நடைபெறும் பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இவ்விழா தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரையில் நேற்று முன்தினம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இவ்விழாவை மத்திய, மாநில அரசுகளின் கரோனா வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் விழாவில் 10,008 பொங்கல் பானைகள் வைக்க முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது. பொங்கல் பானைகளின் எண்ணிக்கையை குறைப்பது, கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கொண்டு வருவோர்களை மட்டும் விழாவில் அனுமதிப்பது, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தின் தூரத்தை அதிகரிப்பது, பார்வையாளர்களுக்கு வழங்குவதற்காக ஒரு லட்சம் முகக்கவசங்களை தயாராக வைத்திருப்பது உட்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.