

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே தலையில் துப்பாக்கிகுண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊரில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் கடந்த டிச.30-ம் தேதி மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், தமிழக போலீஸாரும் தனித்தனியே துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில், வீட்டில் இருந்தபுகழேந்தி(11) என்ற சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்தஅச்சிறுவன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இதையடுத்து, சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி கொத்தமங்கலப்பட்டி, நார்த்தாமலை ஆகிய இடங்களில் சிறுவனின் உறவினர்கள் மற்றும் மக்கள் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு,சொந்த ஊரான கொத்தமங்கலப்பட்டிக்கு கொண்டுவரப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
அமைச்சர்கள் அஞ்சலி
அங்கு அவரது உடலுக்கு அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், எம்பி எம்.எம்.அப்துல்லா, எம்எல்ஏக்கள் எம்.சின்னதுரை, சி.விஜயபாஸ்கர், ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ரூ.10 லட்சத்துக்கான வரைவோலையை வழங்கினர்.
அப்போது அவர்கள் கூறும்போது, ‘‘இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரின் ஆலோசனையுடன் கல்வித்தகுதிக்கு ஏற்ப சிறுவனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை மூடநடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.
அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நார்த்தாமலை, கீரனூர்,இளையாவயல், கொத்தமங்கலப்பட்டி, பசுமலைப்பட்டி உள்ளிட்ட பகுதியில் எஸ்பி நிஷா பார்த்திபன் தலைமையில் போலீஸார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நார்த்தாமலை, கீரனூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன.